பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது, செருப்பு மாலை அணிவிப்பது எனத் தொடர்ந்து சிலர் அவரது சிலையை அவமதித்து வருகின்றனர். இந்நிலையில், தஞ்சை ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் குல்லா அணிவித்து, காவி நிற சால்வையை போர்த்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரி எதிரே பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் முழுஉருவ பெரியார் சிலை உள்ளது. அந்த சிலைக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் காவி நிறத்தில் பொம்மை படம் உள்ள சால்வை அணிவித்து தலையில் மங்கி குல்லா வைத்துச் சென்றுள்ளனர். இன்று காலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் அதைப் பார்த்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அப்பகுதி மக்களே பெரியார் சிலை மீது இருந்த காவி சால்வையையும், குல்லாவையும் அகற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் தலைமையில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
திருக்கோவிலூர் மற்றும் கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயம் பூசி இந்த பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது.
பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்த தமிழக அரசு, இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
**வினிதா**
�,