சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், மனுதர்மத்தில் அனைத்து பெண்களும் கீழானவர்கள் என கருதப்படுகிறார்கள். அனைத்து பெண்களும் பரத்தையர்களாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், திருமாவளவன்தான் அப்படி சொல்லி பெண்களை இழிவுபடுத்திவிட்டதாக பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் அவர் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வைத்தன. காவல் துறையினரிடமும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் திருமாவளவன் மீது மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே மனுஸ்ருமிதி நூலைத் தடைசெய்ய வேண்டுமென விசிக சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு கி.வீரமணி, முத்தரசன், கொளத்தூர் மணி, வேல்முருகன், ராமகிருஷ்ணன், சீமான், திருமுருகன் காந்தி உள்பட பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர். இந்த நிலையில் திருமாவளவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “திருமாவளவன் பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை, சனாதன – வருணாசிரம – மனுஸ்மிருதிகளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். திருமாவளவன் பேசியதை, திரித்துச் சொல்வதற்காக வெட்டி – சமூகவலைதளங்களில் பரப்பி, தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்ட நினைக்கும் மதவெறி அரசியல் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை, அதற்கு நேர்மாறாக திருமாவளவன் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்தப் பொய் வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
தி.மு.க. கூட்டணிக்குள் கலகம் விளைவிக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என வாய் பிளந்து நிற்கும் மதவெறியர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறாது என்ற ஸ்டாலின், “வரலாறு தெரியாமல் மனம்போனபடி உளறுவதையும், உள்நோக்கத்துடன் செயல்படுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று குஷ்புவை மறைமுகமாக சாடினார்.
மேலும், திமுக எந்தப் பிரிவினரையும் விலக்கி வைக்காமல், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்து, அனைவருடைய உயர்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் அல்லும் பகலும் அயராமல் பாடுபடும் பேரியக்கம் என்றும் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
“திருமாவளவன் பெண்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். அவர் யாரையும் புண்படுத்தும் நோக்கில் ஒருபோதும் பேசியது இல்லை. மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அதை வேறுவிதமாகத் திரித்து, அவர் மீது, சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர்” என்று சுட்டிக்காட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,
உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். ஆனால், தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற எடப்பாடி ஆட்சி, இந்துத்துவ சக்திகளைத் திருப்தி செய்யவும், அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவுமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. திருமாவளவன் மீது பதிவு செய்த வழக்குகளை, காவல்துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், “நல்லகண்ணுவை ஆபாசமாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, பெண்ணுரிமை உள்ளிட்ட மனித உரிமைகளுக்காக சமரசமின்றி போராடி வரும் திருமாவளவன் மீது உடனே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது அதிகார மையத்தில் வன்முறை கும்பலின் அழுத்தம் அதிகரித்து வருவதன் அறிகுறியாகும்.திருமாவளவன் மீது போடப்பட்டுள்ள வழக்கை நிபந்தனையின்றி திரும்பப் பெற வேணடும்” என வலியுறுத்தியுள்ளார்.
**எழில்**�,