திமுகவின் முன்னாள் விவசாய அணியின் மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான கே.பி. ராமலிங்கம் நேற்று (ஜூன் 12) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். சந்திப்பு முடிந்ததும் கே.பி.ராமலிங்கம்தான் செய்தியாளர்களை சந்தித்தாரே தவிர முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இப்படி ஒரு சந்திப்பு நடந்தது பற்றிய எந்த குறிப்பையும் வெளிப்படுத்தவில்லை. முதல்வரின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் கூட கே.பி. ராமலிங்கம் தன்னை வந்து சந்தித்தது பற்றிய தகவல் இல்லை.
இதுபற்றி சேலத்தின் திமுக, அதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.
“ஏப்ரல் 12 ஆம் தேதி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் கே.பி. ராமலிங்கம். கொரோனா ஊரடங்கு பாதிப்பு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்த நிலையில் அதை குறை சொல்லி எடப்பாடியை பாராட்டினார் கே.பி.ஆர். எதிர்பார்த்தது மாதிரியே திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
கேபிஆர் பாஜகவில் சேருவார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. கேபிஆரை இழுக்க பாஜக சில முயற்சிகளை நடத்தியது. ஆனால் அரசியல் அனுபவம் அதிகம் கொண்ட கேபிஆர், தமிழ்நாட்டில் பாஜகவில் சேருவதை விட அதிமுகவில் சேருவதே தனக்கு நல்லது என்று கருதினார். அதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புடனே பேசியிருக்கிறார் கேபி.ஆர். அப்போது, ‘கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். திமுகவில் இன்னும் சில முக்கியஸ்தர்களையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்’ என்று எடப்பாடி தரப்பில் இருந்து சொல்லப்பட்டிருக்கிறது.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மூலம்தான் 2010 ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்பி ஆனார் கேபிஆர். அதிமுகவில் இருந்து வந்த செல்வகணபதியை அப்போது ஸ்டாலின் ராஜ்யசபாவுக்கு அனுப்பியபோது, ‘என் மாவட்டத்தில் என் விருப்பம் இல்லாமல் செல்வகணபதியை எம்பி ஆக்குகிறீர்கள். அப்படியென்றால் இன்னொரு இடத்தை நான் சொல்லும் ஆளுக்கே கொடுக்க வேண்டும்’ என்று தலைமையிடம் போராடி செல்வகணபதியோடு சேர்த்து கேபி. ராமலிங்கத்தையும் எம்பி ஆக்கினார் வீரபாண்டி ஆறுமுகம். அதனால் வீரபாண்டி குடும்பத்தின் மீது கேபிஆர் மரியாதையாக இருப்பார். வீரபாண்டி ஆறுமுகத்தின் காலத்துக்குப் பின் வீரபாண்டி ராஜாவுடனும் நல்லவிதமாகவே பழகினார்.
ஒருகட்டத்தில் இருவருமே திமுகவில் இறங்குமுகத்தைக் கண்டனர். இந்நிலையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கேபிஆர், வீரபாண்டி ராஜா உள்ளிட்ட தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசியும் அவர்கள் கேபிஆரின் கருத்தில் உடன்படவில்லை என்றே தெரிகிறது. இந்த நிலையில்தான் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் கேபிஆரோடு செல்ல அவரது ஆதரவாளர்கள் சிலர் தவிர வேறு எந்த முக்கிய நிர்வாகியும் உடன்படவில்லை. இந்தத் தாமதம் பற்றி விளக்கவே எடப்பாடியை சந்தித்துப் பேசியிருக்கிறார் கேபிஆர். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் சேலம், நாமக்கல்லில் இருந்து திமுக புள்ளிகளை கொண்டு வருவதாக எடப்பாடியிடம் கூறியிருப்பதாகத் தகவல். ஆனால் கேபிஆர் ஆபரேஷனில் எடப்பாடி அப்செட். அதனால்தான் திமுகவின் மாநில நிர்வாகியாக இருந்தவர், முன்னாள் எம்பியாக இருந்தவர் தன்னை சந்தித்தும் அதை ஒரு தகவலாகக் கூட அவர் வெளிப்படுத்தவில்லை.
மேலும் எம்ஜிஆர் இறப்பின்போது இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதாவை தள்ளிவிட்டவர் கேபிஆர்,. அவரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் அம்மா அம்மா என்று நாம் உச்சரிப்பதில் அர்த்தமில்லாமல் போய்விடும் என்றும் முதல்வருக்கு சிலர் சொல்லியிருக்கிறார்கள். இதனால்தான் கேபிஆரை கட்சியில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதில் யோசித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. இதைப் புரிந்துகொண்டுதான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘இங்கே போவது அங்கே போவது என்பது பற்றி பேசி அரசியல் செய்ய இது நேரமில்லை’ என்று ஊரடங்கின் மீது தன் பாரத்தை இறக்கி வைத்திருக்கிறார் கேபிஆர்” என்று முடித்தார்கள்.
முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, “கேபி ராமலிங்கம் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி, எடப்பாடியை விட அரசியலில் சீனியர். அதனால் அவரை முதல்வர் மதிக்கிறார், மற்றபடி இந்த சந்திப்பு அரசியலுக்கானதல்ல. அரசியலுக்கான சந்திப்பு விரைவில் நடக்கும்” என்கிறார்கள்.
**-வேந்தன்**�,