�
எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேசி வீரமணி, சி விஜயபாஸ்கர் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் வரிசையில் இன்று (ஜனவரி 20) முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனுக்குச் சொந்தமான, தொடர்புள்ள இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை காலை முதல் ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறது.
முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சரான கே.பி. அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் கே.பி அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்பான அலுவலகங்கள் மற்றும், தர்மபுரி மற்றும் சென்னை, தெலுங்கானா மாநிலத்தில் சில இடங்கள் என 57 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
கே.பி. அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஔவை சண்முகம் சாலையில் உள்ள கணேஷ் கிரானைட் அலுவலகம் உட்பட 3 இடங்கள், தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 41 இடங்கள் சோதனைக்கு இலக்காகியுள்ளன. தர்மபுரி அரூர் அடுத்த செக்காம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியிலும் அதிகாலையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறையினர் நுழைந்துவிட்டனர். இது போல் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ., கோவிந்தசாமி வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் கரிம்நகரில் உள்ள அன்பழகனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள்.
**-வேந்தன்**
�,