fகோவை: பள்ளி முதல்வர் சிறையில் அடைப்பு!

Published On:

| By Balaji

கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த ப்ளஸ் டூ மாணவி பொன் தாரணி கடந்த 11ஆம் தேதி வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், மாணவி ஏற்கனவே படித்த சின்மயா வித்யாலயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் தொல்லைதான் காரணம் என்பது தெரியவந்தது.

இதனால் அவர் மீதும் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை நவம்பர் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து உடுமலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

அதுபோன்று இயற்பியல் ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து புகார் அளித்தும் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாகச் செயல்பட்ட பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதர் சங்கத்தினர், மாணவர் சங்கத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் நேற்று முன்தினம் இரவு தனிப்படையினரால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் கோவை அழைத்து வந்து அவரிடம் போலீஸார் 12 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

இதையடுத்து கோவை மாவட்டம் மகிளா நீதிமன்ற பொறுப்பு நீதிபதி நந்தினி முன்பு மீரா ஜாக்சன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவரையும் வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினரால் நடத்தப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதுபோன்று கோவை அரசு மருத்துவமனையிலிருந்து மாணவியின் உடலைப் பெற்றுக் கொண்ட அவரது பெற்றோர் வீட்டுக்கு கொண்டுவந்து இறுதி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று 12 மணி அளவில் மாணவியின் உடல் ஆத்துப்பாலம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share