சென்னை போன்று கோவையிலும் திமுக மேயர் பதவியை தக்க வைத்தது. அதிமுக கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மணடலத்தை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கைப்பற்றியது.
குறிப்பாக 100 வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சியில் 96 வார்டுகளில் வெற்றிபெற்று கோவையை கைபற்றியது திமுக. இந்தசூழலில் கோவை மாநகராட்சியின் முதல் திமுக மேயர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
கோவை மேயர் பொறுப்பும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திமுக சார்பில் கோவை 19ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா மேயர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
கல்பனாவின் குடும்பம் கோவை மணியகாரன் பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறது. இவரது கணவர் ஆனந்தகுமார். கல்பனாவும், அவரது கணவரும் அந்த பகுதியில் ஒரு பொது சேவை மையத்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்கிற பெருமையுடன் கல்பனா, திமுக சார்பில் கோவை மாநகராட்சியின் முதல் மேயர் என்றபெருமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் கோவையில் எந்த திட்டப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. முதல்வரின் ஆலோசனையின் படி கோவைக்கு வளர்ச்சித் திட்டங்களைப் பெற்றுத் தருவேன். கோவையை நம்பர் 1 மாநகராட்சியாக மாற்றுவேன் என்று கல்பனா கூறியுள்ளார்.
தேர்தலின் போது, மிக அதிக செலவு செய்ததாகச் சொல்லப்படும் கோவை மாநகராட்சியில், வெற்றி பெற்ற கல்பனா கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்திக்கப் பேருந்தில் பயணம் செய்தவர் ஆவார்.
**-பிரியா**