இன்று (ஆகஸ்டு 31) காலை சட்டமன்றத்தில் விழுப்புரத்தில் முந்தைய அதிமுக அரசு ஏற்படுத்திய ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தோடு இணைப்பதற்கான சட்ட முன்வடிவு கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.
இதை ஒட்டி அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் வெளிநடப்பு செய்ததோடு சட்டமன்றம் அருகே சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். அதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தில் பரவலாக அதிமுகவினர் அந்தந்த மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அம்மா ஆட்சியில் விழுப்புரத்தில் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக் கழகத்துக்கு அம்மாவின் திருப்பெயர் வைக்கப்பட்டு, ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. சிண்டிகேட்டிலும் ஒப்புதல் பெறப்பட்டது. இன்றைக்கு திமுக அரசு அம்மாவின் திருப்பெயரை எடுத்துவிட்டு அதை அண்ணாமலை பல்கலையோடு இணைக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கொண்டுவந்த சட்டத்தை அறிமுக நிலையிலேயே எதிர்த்தோம். பேச வாய்ப்பு கேட்டோம்., மறுக்கப்பட்டது. அதையடுத்து வெளிநடப்பும் போராட்டமும் செய்தோம்.
2011 இல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றது முதல் இந்தியாவில் எந்த மாநிலமும் ஒதுக்காத அளவுக்கு கல்விக்கு அதிக நிதி ஒதுக்கினார். இன்னும் சொல்லப் போனால், அண்ணாமலை பல்கலைகழகம் நிதிப் பற்றாக்குறையில் இழுத்து மூட வேண்டிய நிலையில் தத்தளித்தபோது அம்மாதான் அதைக் காப்பாற்றி அரசோடு இணைத்தார். இவ்வளவு செய்த அம்மாவின் பெயரால் அமைந்த பல்கலையை அண்ணாமலை பல்கலையோடு இணைப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை” என்றார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், “ நான் பொன்முடிக்கு சவால் விடுகிறேன். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். அப்போது பிரம்மாண்ட மான முறையில் அம்மாவின் பெயரால் அமைந்த பல்கலைக் கழகம் விழுப்புரத்தில் அமையும்” என்று கூறினார்.
இன்றைய வெளிநடப்பு, போராட்ட நிகழ்வுகளில் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. எடப்பாடி அண்ணன் எங்கே என்று தர்ணாவின்போதே சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேசிக் கொண்டனர்.
இதுகுறித்து அதிமுகவினரிடம் பேசியபோது, “எடப்பாடி பழனிசாமிக்கு பல்வலி போனவாரத்தில் இருந்தே தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அவர் கடந்த வாரம் கூட சட்டமன்றத்தில் பெரிதாகப் பேசவில்லை. இன்று பல்வலி அதிகமாகி அதற்கான சிகிச்சை பெற்றிருப்பதால் சட்டமன்றத்துக்கும், அதைத் தொடர்ந்த போராட்டக் களத்துக்கும் அவரால் வர இயலவில்லை” என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்ற நிலையில் சட்டமன்றத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வத்தின் தலைமையில்தான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். போராட்டம் செய்தனர்.
ஆனால் அதிமுகவின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில்,
“**அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு**
ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதை கண்டித்து அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டவாரே சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு.
**அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியல்**
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
**அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது**
டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதை கண்டித்து வாலாஜா சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அஇஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது
என்று பொதுவாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டதே தவிர, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் வெளிநடப்பு செய்தார்கள், போராட்டம் செய்தார்கள் என்பதை கவனமாக தவிர்த்திருக்கிறார்கள்.
**-வேந்தன்**
�,”