zகொடநாடு எனக்குத்தான்: ஜெயலலிதா பினாமி சசிகலா

Published On:

| By Balaji

கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர் தான்தான் என்று சசிகலா தெரிவித்துள்ளதாக வருமான வரித் துறை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பல்வேறு வகைகளில் வாங்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் அவருடைய பினாமியாக சசிகலா மூலமாகவே வாங்கப்பட்டவை. ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், இதுதொடர்பான வழக்குகளை சசிகலா மட்டும் எதிர்கொண்டு வருகிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, 2017 பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே சசிகலா உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் 2017 டிசம்பர் மாதம் வருமான வரித் துறை சோதனை நடந்தபோது, போயஸ் கார்டனிலுள்ள வேதா நிலையத்திலும் சோதனை நடைபெற்றது. அங்கு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா 5 நாட்கள் பரோலில் வந்துசென்ற பின்னர் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

வருமான வரித் துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பெறப்பட்ட வாக்குமூலங்கள் அடிப்படையில் சசிகலா ரூ.1900 கோடி மதிப்புள்ள பணமதிப்பழிப்பு நோட்டுக்களை அசையா சொத்துக்கள் வாங்கவும், கடனாக அளித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டபோதிலும், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என சசிகலா தெரிவித்துவிட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு அக்டோபர் 15ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ஏன் மேற்குறிப்பிட்ட சொத்துக்களை கணக்கில் காட்டப்படாத வருமானமாக அறிவிக்கக் கூடாது எனக் கூறி அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பதிலளித்த சசிகலாவின் ஆடிட்டர்கள், நோட்டீஸ் எங்களுக்கு அக்டோபர் 19ஆம் தேதி கிடைத்தது. ஆகவே, 3 நாட்களுக்குள் பதிலளிப்பது என்பது இயலாத காரியம். ஆகவே, 30 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். இதனையடுத்து, 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும், அந்த நாட்களுக்குள் பதில் அளிக்கப்படவில்லை. இறுதியாக டிசம்பர் 11ஆம் தேதி ஆடிட்டர்கள் தரப்பிலிருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்து சசிகலாவுக்கு எதுவும் தெரியாது என்றே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. வீடு வணிகம், தொழில்கள் மற்றும் இதர தரவுகளிலிருந்து சசிகலாவுக்கு வருமானம் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 2016-17, 2017-18 ஆகிய நிதியாண்டுகளில் சசிகலாவின் முதலீடுகள் குறித்து அதில் விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

நமது எம்.ஜி.ஆர், ஜெயா பிரிண்டர்ஸ் ஆகியவற்றில் உரிமையாளர் சசிகலாதான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஜெயா பார்ம் ஹவுசஸ், ஜே.எஸ் ஹவுசிங் டெவலப்மெண்ட், ஜெய் ரியல் எஸ்டேட் மற்றும் கிரீன் பார்ம் ஹவுஸ் ஆகியவற்றில் சசிகலா பங்குதாரராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 2016 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரை ஜெயலலிதாவோடு இணைந்து கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட 4 சொத்துக்களுக்கு பங்குதாரராக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்தபிறகு பங்குதாரர் நிறுவனங்கள் கலைக்கப்பட்டு தன்னை உரிமையாளர் என்று சசிகலா தெரிவித்தார்.

இதைத் தவிர இந்தோ கெமிக்கல்ஸ் மற்றும் பார்மாசூடிக்கல்ஸ், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் ஆகியவற்றில் இயக்குனராக சசிகலா இருக்கிறார்.

மேலும், ஜாஸ் சினிமாஸில் சசிகலாவுக்கு 41.66 லட்சம் ரூபாய் பங்குகளும், ஆரேய் லேண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் 3.6 லட்சம் ரூபாய் பங்குகளும், மாவிஸ் சாட்கம் நிறுவனத்தில் 7.02 லட்சம் ரூபாய் பங்குகளும் உள்ளன. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் நிறுவனத்தில் 36, 000 பங்குகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1,900 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கப்படவில்லை என்று சசிகலா மறுத்துள்ளார். “பணமதிப்பழிப்பு நேரத்தில் மதிப்பு நீக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி எந்த சொத்துக்களும் வாங்கவில்லை. யாருக்கும் கடனாகவும் அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

வேதா நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஒரு நோட்டுப் புத்தகத்தில் 7.64 கோடி ரூபாய்க்கான கணக்கு விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அதுகுறித்து விளக்கம் அளித்த சசிகலா, அவை கொடநாடு எஸ்டேட், ராயல் வாலி ப்ளோரிடெக் எக்ஸ்போர்ட்ஸ், கிரீன் டீ எஸ்டேட் ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்று குறிப்பிட்டார் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share