தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக வழங்கப்படும் ஸ்வீட் கொள்முதலில் முறைகேடுகள் நடப்பதாக அக்டோபர் 18 ஆம் தேதி, மின்னம்பலம் இணையதளத்தில் முதன்முதலாக செய்தி வெளியிட்டோம்.
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன் திலீப் இந்த விவகாரத்தில் தலையிடுவதாகவும் மொத்தம் உள்ள 9 போக்குவரத்து கழகங்களுக்கும் சேர்த்து 100 டன் ஸ்வீட் கொள்முதல் செய்யப்படும் நிலையில்… சிறிய நிறுவனங்கள் பங்கேற்பதை தடுப்பதற்காக வருடத்திற்கு 100 கோடி ரூபாய் டர்ன் ஓவர் செய்யும் நிறுவனங்களுக்கு தான் டெண்டரில் கலந்து கொள்ள தகுதி என்றும் மாற்றப்பட்டு இருப்பதையும் மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.
இந்தச் செய்தி அரசியல் வட்டாரங்களிலும் அரசு வட்டாரங்களிலும் அதிர்வுகளை கிளப்பியது. கடந்த அதிமுக ஆட்சியில் நடந்தது போலவே இந்த ஆட்சியிலும் கமிஷன் கொள்ளை நடந்து விடக்கூடாது என்று தொழிற் சங்கங்களும் வலியுறுத்தின.
மின்னம்பலம் செய்தியை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போன்ற அரசியல் தலைவர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.
இந்நிலையில் நமது செய்திக்குப் பிறகு, மின்னம்பலம் செய்தியில் பேட்டியளித்திருந்த சிஐடியு தொழிற்சங்க தலைவர் ஆறுமுகநயினாரை முதல்வர் அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். மேலும் போக்குவரத்து துறைக்கு என செயல்பட்டு வரும் லஞ்ச ஒழிப்புத்துறையான போக்குவரத்து விஜிலன்ஸ் அலுவலகத்துக்கும் முதல்வர் அலுவலகத்திலிருந்து இதைப் பற்றி தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களும் ஆறுமுக நயினாரிடம் இதுபற்றி விவரங்களைக் கேட்டறிந்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று (அக்டோபர் 23) பத்திரிக்கையாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் தீபாவளி ஸ்வீட் சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த அவர், கடந்த ஆட்சியில் 262 ரூபாய்க்கு (அரை கிலோ) தீபாவளி இனிப்பு கொள்முதல் செய்தார்கள். அதை விட விலை குறைவாக வாங்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறோம். எந்தத் தவறும் நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இன்னும் அந்த டெண்டர் திறக்கப்படவில்லை. டெண்டர் திறக்கப்பட்ட பிறகுதான் அதில் எந்த நிறுவனம் குறைவாக விலை குறிப்பிட்டிருக்கிறதோ அது பற்றி பரிசீலிப்போம். மேலும் இந்த இனிப்புகளின் தரமும் முக்கியம். டெண்டரில் ஏதும் பிரச்சனை என்றால் அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் இருந்து இனிப்புகளை வாங்குவோம்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு .க ஸ்டாலின் நேற்று மாலை தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான தீபாவளி இனிப்புகளை அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் இருந்து வாங்க வேண்டுமென துறை அமைச்சர் கண்ணப்பனிடம் அறிவுறுத்தியிருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் இந்த டெண்டர் 26 ஆம் தேதி திறக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
நம்மைத் தொடர்புகொண்ட வாசகர்கள், ‘மின்னம்பலம் செய்தியின் அடிப்படையிலேயே தீபாவளி ஸ்வீட்டுகளை ஆவினில் இருந்து வாங்க முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார் என்று செய்திகள் வந்துள்ளன. இதை உத்தரவாகவோ அறிவிப்பாகவோ வெளியிட வேண்டும்” என்கிறார்கள்.
**-வணங்காமுடிவேந்தன்**
[ஸ்வீட் வாங்குவதில் கமிஷன்: அமைச்சர் மகனின் அதிரடி தீபாவளி!](https://minnambalam.com/politics/2021/10/18/27/sweet-purchase-commission-minister-rajakannappan-son-aligations-transport-aavin)
[ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!](https://minnambalam.com/politics/2021/10/21/13/deepavali-tamilnadu-transport-corporation-sweet-tender-minister-rajakannappan)�,”