rதபால் வாக்கு: அமைச்சர் ஜெயகுமார் கோரிக்கை!

Published On:

| By Balaji

மே 2ஆம் தேதிதான் தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதிக்காக கட்சி தலைவர்கள் உள்பட மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சரும் ராயபுரம் தொகுதி வேட்பாளரான ஜெயகுமார் இன்று(ஏப்ரல் 22) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து அதிமுக சார்பில் மனு ஒன்று அளித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 2ஆம் தேதியில்தான் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், எக்காரணத்தைக் கொண்டும் மே 1ஆம் தேதி தபால் வாக்குகள் பிரிக்கப்படக் கூடாது. கடந்த காலங்களில் எந்த வழிமுறைகளை பின்பற்றி தபால் வாக்குகள் எண்ணப்பட்டதோ, அதுபோன்றுதான் மே 2ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்.

சில மாவட்டங்களில் மே 1ஆம் தேதி தபால் வாக்குகள் எண்ணும் பணி நடக்க இருப்பதாக அதிமுக தலைமைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, தலைமை தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றச்சாட்டு இருந்தால் அதை சரிசெய்ய வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. வாக்கு எண்ணிக்கையில் எந்த காரணத்தைக் கொண்டும் மேஜைகளை குறைக்கக் கூடாது” என பேசியுள்ளார்.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share