வாடகை கட்டிடத்தில் எய்ம்ஸ்!

Published On:

| By Balaji

மதுரையில் வாடகை கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தற்காலிகமாகத் தொடங்க ஒன்றிய அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2019 ஜனவரி 27ஆம் தேதி மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்ட வேண்டுமென ஒன்றிய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் இடத்தை சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

அப்போது,மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரத்தினவேலு ஆகியோர் உடன் இருந்தனர் .

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செயலாளர் ராதாகிருஷ்ணன், “எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைய வேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

இந்த திட்டத்துடன் 150 படுக்கைகளுடன் கூடிய ஒரு தொற்றுநோய் பிரிவையும் சேர்த்துக் கட்டுவதற்கு 1977.8 கோடி ரூபாய் நிதி உதவி பெற ஜப்பானைச் சேர்ந்த ஜைக்கா நிறுவனத்திடம் ஒன்றிய அரசு கடன் கேட்டது. இதற்கு, அந்த நிறுவனமும் கடந்த மார்ச் 26ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்தாலும், மருத்துவமனையின் எந்தெந்த பிரிவு கட்டிடங்களை எங்கெங்கு கட்டுவது உள்ளிட்டவற்றை ஆராய ஆலோசகரை நியமிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுபோன்று தற்காலிகமாக நடப்பாண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்களைச் சேர்க்க ஒன்றிய அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளது. உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கட்டிடம் கட்டி முடிக்கும்வரை வாடகை கட்டிடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை நடத்துவதற்குத் தயார் என்றும் அதற்கான வாடகையைத் தருவதாகவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

எனவே தற்காலிக கட்டிடம் தேர்வு செய்வது குறித்தும் அதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் முதல்வர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்.

எய்ம்ஸ் கட்டுமான பணிகளையும் அதன் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மட்டுமில்லாது, புதுச்சேரி ஜிப்மர், ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் இணை இயக்குநர்களையும் ஒருங்கிணைத்து ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு வரும் 20ஆம் தேதி சென்னைக்கு வரவுள்ளது. அவர்களிடம் எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சேர்க்கை, தற்காலிக கட்டிடம், விரைவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறினார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share