தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில், தேசிய பசுமை தீர்ப்பாய சட்டத்தின் பிரிவு 5இன்படி நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்படுபவர்களுக்கு 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப் பணி அனுபவமும் அதில் ஐந்து ஆண்டுகள் சுற்றுச்சூழல் துறை சார்ந்த பணி அனுபவம் இருக்க வேண்டும். கிரிஜா வைத்தியநாதனுக்கு 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப் பணி அனுபவம் இருந்தாலும் சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் அனுபவம் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ளது. எனவே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏப்ரல் 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது வழக்கு முடியும் வரை கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்க தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று (ஏப்ரல் 17) மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கிரிஜா வைத்தியநாதன் சார்பில் வழக்கறிஞர் சந்தானராமன் ஆஜராகி, ‘சுற்றுச்சூழல் துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை ஆகிய துறைகளில் ஐந்து ஆண்டுகள் 9 மாதங்கள் கிரிஜா வைத்தியநாதன் பணியாற்றியிருக்கிறார். இது மட்டுமின்றி பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிப்பு வழிகாட்டு குழுவின் தலைவராகவும், கூவம் ஆற்றை சுத்தம் செய்யும் கண்காணிப்புக் குழுவிலும் இடம்பெற்றிருக்கிறார். அவருக்கு சுற்றுச்சூழல் சம்பந்தமான துறைகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ளது’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மத்திய அரசு மற்றும் மனுதாரர் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கிரிஜா வைத்தியநாதன் சுற்றுச்சூழல் சம்பந்தமான துறையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். எனவே அவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினர் பதவி நியமனத்துக்கு தகுதி இல்லாதவர் என்று கருத முடியாது. எனவே அவரது நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
**-பிரியா**
�,