கொடநாடு கொலை வழக்கு: உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல்?

Published On:

| By Balaji

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தமிழக அரசு மேல் விசாரணை நடத்தத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்டு 27 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு சென்றிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படும் ஜெ.வின் டிரைவர் கனகராஜ் உள்ளிட்ட சிலர் இந்த கொலை சம்பவத்துக்குப் பிறகு மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் இந்த வழக்கின் விசாரணையில் பல குறைபாடுகள் இருப்பதால் இதை மேல் விசாரணை செய்ய திமுக அரசு முனைந்தது. இதை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்த்தார். இது தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தையும் எடப்பாடி சந்தித்தார்.

இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் கொடநாடு வழக்கில் மேல் விசாரணை செய்யக் கூடாது என்று இவ்வழக்கின் சாட்சியான அனுபவ் ரவி என்பவர் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கை ஆகஸ்டு 27 ஆம் தேதி தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், “ இந்த வழக்கைத் தொடர்ந்தவர் குற்றம் சாட்டப்பட்டவரோ புகார் தாரரோ இல்லை. இவர் வெறும் சாட்சி மட்டுமே. கொடநாடு கொலை வழக்கில் மர்மங்கள் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை இல்லை” என்று மேல் விசாரணைக்கு அனுமதி வழங்கியது.

இந்நிலையில் இன்று (ஆகஸ்டு 30) காலை சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அனுபவ் ரவி மனு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் என்ற வகையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய சட்டத்தில் வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் அனுபவ் ரவியால் ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் உச்ச நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அதுபற்றிய மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் டெல்லி பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

உயர் நீதிமன்றத்தில் மேல் விசாரணையை தடுத்து நிறுத்தக் கோரி அனுபவ் ரவி தாக்கல் செய்த மனு விசாரணையின்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், ‘இந்த மனுவை தாக்கல் செய்தவர் சாட்சி மட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு நெருக்கமாக இருப்பவர்’ என்று வாதாடியிருந்தனர். இதன் மீதான தீர்ப்பில் நீதிபதி, ’இந்த வழக்கைத் தொடர்ந்தவர் குற்றம் சாட்டப்பட்டவரோ புகார் தாரரோ இல்லை. இவர் வெறும் சாட்சி மட்டுமே’என்று குறிப்பிட்டிருந்தார். சாட்சியாக சேர்க்கப்பட்டிருப்பவருக்கு விசாரணையை நிறுத்துமாறு கேட்க எந்த உரிமையும் இல்லை. ஆனபோதும் அவர் உயர் நீதிமன்றத்தில் மனு செய்து அது தள்ளுபடியான நிலையில், இப்போது உச்ச நீதிமன்றத்திலும் ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share