பெண் பத்திரிகையாளர் அளித்த புகாரின் பேரில் கிஷோர் கே.சாமி என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பத்திரிகையாளர்கள் , ஊடகங்கள் மீது அவதூறு பரப்பும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தனிமனித தாக்குதல்கள் மூலம் பத்திரிகையாளர்களை மிரட்டுவது, தரக்குறைவாக எழுதுவது, பெண் பத்திரிகையாளர்கள் மீது அவதூறு பரப்புவது போன்ற செயல்கள் நடந்து வருகின்றன. அரசியல் விமர்சகர் எனக் கூறிக்கொண்டு விவாத நிகழ்ச்சிகளில் பங்குபெறும் கிஷோர் கே.சாமி என்பவரும் இதுபோன்ற கருத்துகளை தொடர்ந்து கூறிவந்தார்.
இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதாகவும், எழுதியதாகவும் கிஷோர் கே.சாமி மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் நேற்று (ஜூலை 29) புகார் அளித்தார். அதன் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், கிஷோர் சாமியை தேடிய நிலையில் அவர் தலைமறைவானார்.
இந்த நிலையில் கிஷோர் கே.சாமி சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கிண்டியில் யூடியூப் சேனலில் இருந்தபோது, அவரை போலீஸார் கைது செய்தனர். எனினும், கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே கிஷோர் கே.சாமி விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்ட கண்டன அறிக்கையில், “மிகத் தரக்குறைவான கீழ்த்தரமான அவதூறு பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருபவர் கிஷோர் கே.சாமி. இந்த நபர் மீது சென்னை பெருநகர காவல் துறையினரிடம் பல பத்திரிகையாளர்கள் – பத்திரிகையாளர் அமைப்புகள் புகாரளித்தும் இதுவரை சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்த நபர் மீது இதுவரை பத்திரிகையாளர்கள் கொடுத்த அத்தனை புகார்களின் மீதும் வழக்குகள் உடனடியாக பதிவு செய்யப்பட்டு அருவருப்பான அவதூறு பேர்வழி கைது செய்யப்பட வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், “தமிழகத்தில் ஊடகத்துறையினர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இணையவழி அவதூறு தாக்குதல்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பார் என்றும் நம்புகிறோம்” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**எழில்**�,