சமூக தளங்களில் சர்ச்சைகளுக்கும், மலினங்களுக்கும் சொந்தக்காரரான கிஷோர் கே.ஸ்வாமி கடந்த ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு வழக்கில் நேற்று (ஜூன் 16) கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கிஷோர் கே.ஸ்வாமி திமுகவுக்கும், இடதுசாரிகளுக்கும் எதிராக தொடர்ந்து கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார். திமுக ஆட்சி அமைந்த பிறகும் முதல்வர் ஸ்டாலின், திமுகவின் முன்னோடித் தலைவர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோரைப் பற்றி தனது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். அவருக்கு எதிராக திமுகவினர் சைபர் க்ரைம் போலீஸிடம் புகார் அளித்தனர். கடந்த ஆட்சியிலேயே அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டும் அவர் மீது நடவடிக்கை இல்லை.
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி என்பதால் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கிஷோர் கே.ஸ்வாமி மீது வழக்குப் பதிந்தனர். 153, 505(1) (b), 505 (1) (c) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி சென்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் பெண் பத்திரிகையாளர்களை ஏற்கனவே கொச்சைப்படுத்தி விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிஷோர் கே சுவாமியை கடந்த ஜூலை 2020 இலேயே கைது செய்தனர் போலீசார். ஆனால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாமல் போலீஸார் விடுவித்தனர். இது அப்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசியல் செல்வாக்கால் இதுபோன்று விடுதலை செய்யப்பட்டார் கிஷோர்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் கிஷோர் மீது, நிலுவையில் இருந்த இந்த வழக்கிலும் போலீஸார் நடவடிக்கை எடுத்து நேற்று (ஜூன் 16) அவரை மீண்டும் கைது செய்தனர் இந்த வழக்கிலும் இரு வாரங்கள் ரிமாண்ட் செய்யப்பட்டார் கிஷோர் கே.சுவாமி.
**-வேந்தன்**
�,