கிசான் திட்ட ஊழல்: தலைமைச் செயலாளர், கலெக்டர்களிடம் பாஜக மனு!

politics

பாஜக தமிழக தலைவர் எல். முருகன் அறிவித்தபடி இன்று (செப்டம்பர் 7) தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து மத்திய அரசின் விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவித் திட்டத்தில் மோசடி நடைபெற்றிருப்பது குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு பிரமுகர்களும் கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுக்க, சென்னையில் பாஜக மாநில பொது செயலாளர் கரு நாகராஜன், மாநில துணைத்தலைவர் M .N .ராஜா, வி.பி.துரைசாமி மற்றும் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ் ஆகியோர் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் மோசடி குறித்து திருப்ப த்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவன் அருளிடம் மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் வாசுதேவன், முன்னாள் மேயரும் மாநிலச் செயலாளருமான கார்த்திகாயினி உள்ளிட்டோர் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டத்தில் மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கலெக்டரிடம் மனு அளித்தார்.

கடலூர் மாவட்ட பாஜகவினர் கலெக்டரைப் பார்க்க காத்திருந்தும் முடியாமல் விவசாயப் பிரிவு அதிகாரியிடம் மனுவை அளித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டரின் பி.ஏ.விடம் மனு கொடுத்தனர். பாஜகவின் விவசாயப் பிரிவு தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பாஜகவின் முன்னோடிகள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்திலும் பாஜகவினர் கலெக்டரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இதுகுறித்துக் கூறும் சேலம் பாஜகவினர், “ தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளும் முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்திலேயே பிரதமரின் கிசான் திட்டத்தில் போலியான விவசாயிகள் பெயரில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக தெரிகிறது” என்கிறார்கள். இந்த முறைகேடு தொடர்பான விஷயத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட பாஜக சார்பாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மணிகண்டன் மற்றும் விவசாய பிரிவு நிர்வாகிகள் ஆகியோர் சேலம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழகம் முழுக்க பாஜகவினர் அளித்த மனுக்கள் மீது கலெக்டர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இன்று அளிக்கப்பட்ட அத்தனை புகார்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஆளுநரிடம் கொடுக்கப்படும் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.