கடந்த ஜூன் 5ஆம் தேதி தமிழகத்தின் முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் 44 பேர் இடமாறுதல் மற்றும் புதிய நியமனங்கள் செய்யப்பட்டனர். பல மாவட்ட எஸ்.பி.க்கள் அந்த மாற்றப் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இதேபோல வெகு விரைவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாற்றம் செய்யப்படலாம் என்றும் பட்டியல் வெளியிடப்பட தயாராக இருப்பதாகவும் கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தின் முக்கியத்துவம் பற்றி கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம்.
“திமுக ஆட்சி அமைந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் சில முறை நடந்திருக்கிறது. ஆனால் இந்த முறை தலைமைச் செயலகத்தின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் கூட மாற்றப்படலாம் என்கிறார்கள்.
கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உள்துறை செயலாளராக எஸ்.கே. பிரபாகர் நியமிக்கப்பட்டார். ஆட்சி நிர்வாகத்தில் தலைமைச் செயலாளருக்கு அடுத்த நிலையில் பவர்ஃபுல் பதவியாக இருப்பது உள்துறை செயலாளர் பதவிதான். திமுக ஆட்சி அமைந்ததும் தலைமைச் செயலாளராக இறையன்புவை நியமித்த முதல்வர் ஸ்டாலின் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் உள்துறையின் செயலாளராக பிரபாகரையே தொடர அனுமதித்தார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவருக்கு மிகவும் வேண்டிய அதிகாரிகள் பட்டியலில் முக்கியமானவராக இருந்தவர் எஸ்.கே. பிரபாகர். ஆனபோதும் கடந்த ஒருவருட திமுக ஆட்சியிலும் அவரே உள்துறைச் செயலாளராக தொடர்ந்து வருகிறார். இவர் உள்துறைச் செயலாளராக பதவியேற்று வரும் நவம்பரோடு மூன்றாண்டு காலம் முடிகிறது.
இந்தப் பின்னணியில் புதிய உள்துறை செயலாளர் யார் என்ற ஆலோசனை கடந்த சில வாரங்களாகவே முதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் நடந்திருக்கிறது. உள்துறை செயலாளர் என்ற முக்கியமான பதவியை கைப்பற்ற சில அதிகாரிகள் முயற்சித்து வருகிறார்கள். தற்போதைய சுகாதாரத் துறை செயலாளராக இருக்கும் ஜெ.ராதாகிருஷ்ணன் பெயர் கூட உள்துறை செயலாளர் பதவிக்கான உத்தேசப் பட்டியலில் இருந்தது.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த வெளி மாநில அதிகாரிகள், ‘தமிழ்நாடு அரசின் முக்கியமான பதவிகளான தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, உளவுத்துறை ஏடிஜிபி போன்ற அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே தரப்பட்டிருக்கிறது. நாமும் தமிழ்நாட்டில்தான் நீண்ட ஆண்டுகள் பணியாற்றி வருகிறோம். எனவே முக்கிய பதவிகளுக்கு வெளி மாநில அதிகாரிகளையும் பரிசீலிக்க வேண்டும்’ என்று தங்களுக்குள் ஆலோசித்து அதன்படியே சில லாபிகளையும் செய்யத் தொடங்கினார்கள்.
இந்த வகையில் உள்துறை செயலாளர் பதவிக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி (பஞ்சாப்), வணிக வரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி(ஆந்திரா), வணிக வரித்துறை செயலாளர் சிவதாஸ் மீனா (ராஜஸ்தான்) ஆகிய வெளிமாநில அதிகாரிகளின் பெயர் பரிசீலனை செய்யப்பட்டு… சிவதாஸ் மீனா பெயர் முதல் இடத்தில் இருக்கிறது.
தற்போது சுகாதாரத் துறை செயலாளராக இருக்கும் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் வருவாய் துறை நிர்வாக ஆணையராகவும், அதே சுகாதாரத்துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் செந்தில் சுகாதாரத்துறை செயலாளராகவும், தற்போது வருவாய் துறை நிர்வாக ஆணையராக இருக்கும் சித்திக் சென்னை மெட்ரோ நிர்வாக இயக்குனராகவும் சில நாட்களில் நியமிக்கப்படலாம்” என்கிறார்கள் கோட்டை வட்டாரங்களில்.
இவர்கள் உட்பட இன்னும் பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப் பட்டியல் பற்றிய தகவல்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
**-வணங்காமுடி**