உள்ளாட்சித் தேர்தல் வருவதால்தான் நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக சமூக வலைதளங்களில் சிலர் கூறுவது தவறான தகவல் என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு டிசம்பர் இறுதி முதலே கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. ஜனவரி மாதத்தில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைத் தாண்டியது. அதிகபட்சமாக ஜனவரி 22ஆம் தேதி ஒருநாள் பாதிப்பு 30,744 ஆக உயர்ந்தது. அதற்கடுத்த நாளான ஜனவரி 23இல், 30,580 ஆக குறைந்தது. இதற்கடுத்து தொடர்ந்து படிப்படியாக தொற்று குறையத் தொடங்கியது. ஜனவரி 26இல் 29,976 ஆகவும், ஜனவரி 28இல் 26,533 ஆகவும் குறைந்து வந்த பாதிப்பு, நேற்று (ஜனவரி 31) 20 ஆயிரத்துக்கு கீழே சென்று 19,280 ஆக குறைந்துள்ளது.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 26 அன்று அறிவித்தது. இதற்கடுத்து தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கொரோனா தொற்று மடமடவென குறைந்து வருகிறது. தேர்தலுக்காக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டு வருகிறது என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஒரு கருத்து பரவி வருகிறது. தேர்தல் வருகிறதால், கொரோனா பாதிப்பு குறைகிறது. கொரோனாவுக்கும், தேர்தலுக்கும் சம்பந்தமில்லை. தொற்று எண்ணிக்கை, தேர்தலை பார்க்காமல்தான் உயரும். கூட்டம் அதிகமாக இருந்தால், பாதுகாப்பு இல்லாமல் இருந்தால் பரவும். தேர்தல் வருவதால் குறைவதாகக் கூறினால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஏன் குறைகிறது? டெல்லி, மும்பையிலும் கொரோனா தொற்று குறைகிறது. அப்படியென்றால், அங்கேயும் தேர்தல் நடக்கிறதா? அதுபோன்று கர்நாடகாவில் தொற்று 50 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரமாகக் குறைந்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆழமான, நியாயமான கருத்தை பதிவிடுங்கள். ஏனென்றால், உங்கள் கருத்தை பலர் நம்பி, கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது. ஒரு தடுப்பூசி செலுத்துவதற்காக இரவு பகலாகப் பணி செய்கிறபோது, தேர்தல் வந்த பிறகு குறைந்துவிட்டது எனக் கூறுவது எல்லாம் சரியல்ல. ஒமிக்ரான் எந்த வேகத்தில் ஏறியதோ, அதே வேகத்தில் குறைந்து வருகிறது. இன்னொன்று, டெல்டா இன்னும் முழுமையாக ஒழியவில்லை. மூன்றாவது அலையில் தொற்று அதிகமாக இருந்த நாள் ஜனவரி 22. அன்றைக்கு 30,744 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது பாதிப்பு இறங்குமுகத்தில் உள்ளது. இதே இறங்குமுகத்தில் இருக்க வேண்டுமென்றால், பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை. தற்போதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய விலக்குதான் இன்றைய தினமும் கூட இருக்கிறது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு விகிதம் ஜனவரி மத்தியில் மிக அதிகமாக இருந்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, அதிகளவில் குறைந்துள்ளது. மாநிலம் முழுவதும் தொற்று குறைந்து வந்தாலும், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, இதற்கடுத்தப்படியாக நாமக்கல், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரியும், அதற்கடுத்தபடியாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவள்ளூர் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில் நோய்த்தொற்று கணிசமாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 80 விழுக்காடு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டாலும், 15 முதல் 20 விழுக்காடு டெல்டாதான் உறுதியாகிறது. மருத்துவமனைகளில் 5 சதவிகித பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர், 95 சதவிகிதத்தினர் வீட்டு தனிமையில் உள்ளனர். இறப்பைக் குறைப்பதுதான் நம்முடைய நோக்கம். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், தொற்றுக்கான அறிகுறி தென்பட்டவுடனே, மருத்துவமனைக்குச் செல்லுதல், சிகிச்சை பெறுதல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றை தவறாமல் செய்தால் மட்டுமே இறப்பைத் தவிர்க்க முடியும்” என்று கூறினார்.
**-வினிதா**
�,