வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராம் ஏப்ரல் 16ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் நடந்த திருப்பதி பெருமாள் திருக்கல்யாண உற்சவ படங்களை அனுப்பி இருந்தது.
அந்த படங்களில் ஆளுநர் இருப்பதை பார்த்த வாட்ஸ்அப், “இந்த ஆன்மீக விழாவிலும் அரசியல் ஒளிந்திருந்தது” என்ற குறிப்பை அனுப்பிவிட்டு விரிவான மெசேஜ் டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாட்டில் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையிலான கருத்துவேறுபாடுகள் அதிகரித்துள்ளன. நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் 2021 செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதை கடந்த பிப்ரவரி மாதம் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
இரண்டாவது முறையாக நீட் விலக்கு சட்ட மசோதாவை பிப்ரவரி எட்டாம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பியும் அதை இன்றுவரை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை ஆளுநர். அதுமட்டுமல்ல நீட் மசோதா தவிர மேலும் பல மசோதாக்களையும் முதல்வரை நேரில் வலியுறுத்தியும் ஒப்புதல் அளிக்காமல் தன் மேசையிலேயே வைத்திருக்கிறார் ஆளுநர்.
இதன் முக்கியமான விளைவாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தது தமிழக அரசு. தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என யாரும் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அரசியல் ரீதியில் பார்த்தால் தமிழ்நாட்டின் எதிர்க் கட்சிகள் மட்டுமே ஆளுநர் விருந்தில் கலந்துகொண்டன.
இந்த நிலையில் இனி தமிழகத்தில் ஆளுநர் கலந்து கொள்ளும் எந்த நிகழ்விலும் தமிழக அரசு சார்பில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் என யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஒன்றிய அரசோடு எப்படி கடுமையாக உறுதியாக மோதுகிறாரோ, அதேபோல இனி தமிழ்நாட்டிலும் ஆளுநர் விவகாரத்தில் தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்திருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள்.
இதன் ஒரு பகுதியாகத்தான், ஏப்ரல் 16ஆம் தேதி தீவுத்திடலில் திருப்பதி பெருமாள் கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு இந்து சமய அறநிலையத்துறை, தமிழக சுற்றுலாத்துறை உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்பு முழுமையாக கொடுக்கப்பட்டது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தது. மேலும் திருப்பதி பெருமாளின் பக்தரான அமைச்சர் கே. என். நேருவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதாக தகவல்கள் வந்தன. ஆனால் திருப்பதி கல்யாண வைபவத்தில் ஆளுநர் ரவி கலந்துகொள்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அமைச்சர்கள் யாரும் அங்கே செல்லவில்லை.
இது மட்டுமல்ல… முக்கிய ஆன்மீக விழாக்கள் நடக்கும்போது அங்கே முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நிச்சயமாக கலந்துகொள்வார். திருப்பதி கல்யாண உற்சவத்திலும் துர்கா ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் முதல் நாள் ஏப்ரல் 15ஆம் தேதி திருப்பதிக்கே சென்று சுவாமி தரிசனம் செய்து வந்து விட்டார்.
ஆளுநர் ரவி கலந்து கொண்ட காரணத்தால் தான் திருப்பதி சீனிவாச கல்யாண நிகழ்வில் அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இனி எல்லா வகையிலும் ஆளுனரைப் புறக்கணிக்கும் முடிவு தொடரும் என்கிறார்கள் ஆளும் கட்சி வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.