மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத அரசியல் தன்மையைக் கொண்ட கேரளத்தில், கொள்கைக்காக ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வது அதிகரித்து வருகிறது.
மாநிலத்தின் சில பகுதிகளில் குறிப்பிட்ட மதவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வன்முறை மூலமாக மட்டுமே மாற்றுத்தரப்புடன் பேசமுடியும் என்கிறபடி செயல்படுகிறார்கள். போதாக்குறைக்குச் சட்டப்பேரவைத் தேர்தலும் வந்துவிட, 22 வயது இளைஞர் ஒருவரின் உயிர் சில நாள்களுக்கு முன்னர் பலியாகியிருக்கிறது.
ஆலப்புழா மாவட்டம் வயலார் அருகில் நகம்குளங்கராவில் கடந்த புதன்கிழமையன்று கொலை நிகழ்ந்திருக்கிறது. ஆர்எஸ்எஸ் கிளை ஊழியரான நந்து கிருஷ்ணா என்பவரே, மோதலில் கொல்லப்பட்டவர்.
மாநில பாஜகவின் சார்பில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை ’விஜய் யாத்திரை’ (வெற்றிப் பயணம்) நடத்தப்பட்டது. அதைத் தொடங்கி வைப்பதற்காக உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் வந்திருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி நடத்தினர். அந்த ஊர்வலத்தை முன்னிட்டே இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகியிருக்கிறது.
ஊரின் முக்கிய சந்திப்பை எஸ்டிபிஐ வாகனப் பேரணியினர் கடந்து சென்றபோது, ஊர்வலத்தைப் பற்றி சிலர் தேவையில்லாமல் வார்த்தைகளை விட்டுள்ளனர்; அதனால் அந்த அமைப்பினர் கோபமடைந்து வாக்குவாதத்தில் இறங்கியுள்ளனர். அது வலுத்து ஒருகட்டத்தில் வாய்ப்பேச்சு கைகலப்பாக மாறியிருக்கிறது என்பது நடுநிலையான தகவல்.
ஆனால், எஸ்டிபிஐ அமைப்பினரே தங்கள் நிர்வாகியைக் கொன்றுவிட்டதாக இந்துத்துவ அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். எஸ்டிபிஐ கட்சியின் தாய் அமைப்பான பாப்புலர் பிரண்ட் அமைப்புதான் இந்தப் படுகொலையின் பின்னால் இருக்கிறது என குற்றம்சாட்டுகிறார், பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன்.
எஸ்டிபிஐ அமைப்போ, இந்த மோதல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டமிட்ட தாக்குதல் என்றும் நந்து கிருஷ்ணாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் எஸ்டிபிஐ பேரணி நடத்தி வருகிறது; வயலாரை பேரணி அடைந்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஊர்வலத்தைச் சீர்குலைக்கப் பார்த்தார்கள். ஆயுதங்களுடன் எங்கள் தொண்டர்களை அவர்கள் தாக்கினார்கள்; அதில் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்கிறது, எஸ்டிபிஐயின் அறிக்கை.
இந்தக் கொலையைக் கண்டித்து ஆலப்புழா மாவட்டத்தில் அடுத்த நாள் முழு அடைப்புக்கு பாஜகவும் இந்துத்துவ அமைப்புகளும் அழைப்புவிடுத்திருந்தன. அன்று, சேர்தலா பகுதியில் எஸ்டிபிஐ அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான கடைகளும் வாகனங்களும் சேதமாக்கப்பட்டன. அதையடுத்து மூன்று நாள்களுக்கு மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை அறிவித்தார், மாவட்ட ஆட்சியர் அலெக்சாண்டர்.
பாப்புலர் பிரண்ட் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு; அதற்குத் தடைவிதிக்க வேண்டும்; காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதை ஆதரிக்கின்றன என்கிறார், கேரள பாஜக தலைவர் சுரேந்திரன்.
எஸ்டிபிஐ தரப்பிலும் இதேபோல குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அந்த வட்டாரத்தில் இன்னும் பதற்றம் தணியவில்லை.
சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் இன்னொரு மாநிலமான மேற்குவங்கத்தில் பாஜகவுக்கும் ஆளும் மம்தா கட்சியினருக்கும் இடையே மோதலாகி, உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. அதைப்போலவே கேரளத்திலும் உயிர்ப்பலி வன்முறை தலைதூக்கியிருப்பது மாநிலத்தின் அமைதியைக் குலைத்துப்போட்டிருக்கிறது.
**- இளமுருகு**
�,