நமக்கான காலம் வரும்: விஜயகாந்த்

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நமக்கான காலம் நிச்சயம் வரும் என்று கட்சியினருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக படுதோல்வி அடைந்துள்ளது. முரசு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தொண்டர்களுக்கு விஜயகாந்த் எழுதிய அறிக்கையில், “ 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முரசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வி பழனிக்கு எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோல் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அதிகார பலம், பண பலத்தை மீறி நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம். உண்மை, நேர்மை, உழைப்பை மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். நமக்கான காலம் நிச்சயம் வரும். அதுவரை கழக தொண்டர்கள் துவண்டு விடாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share