விவசாயிகளின் விளைபொருட்களுக்கான விலை ஏறவில்லை என்றாலும், விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும், யூரியா, பொட்டாசியம், பாக்டாம்பாஸ், காம்ப்ளக்ஸ் உரம், பூச்சி மருந்துகள் ஆகியவற்றின் விலை மட்டும் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. விலை உயர்வு ஒரு பக்கம் என்றால் உரம், யூரியாவுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது.
சில தனியார் கடைகளில் பயிர்களுக்கு உரம் மற்றும் மருந்து வாங்கினால் பில் கொடுப்பதில்லை. பில்லுக்கு பதிலாக துண்டு சீட்டில் தொகையை மட்டுமே எழுதிக் கொடுப்பதும் நடந்து வருகிறது.
விவசாயிகளை பாதிக்கும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது, உரம் வாங்கப்போகும் விவசாயிகளிடம் இயற்கை உரம்(ஆர்கானிக் உரம்) என்ற பெயரில் சில பொருட்களை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறார்கள். விற்று வருகின்றனர். இந்த ஆர்கானிக் உரத்தை வாங்கினால் தான், மற்ற உரங்கள் தரப்படும் என்று நிர்பந்தப் படுத்துகிறார்கள் உர விற்பனையாளர்கள்.
தனியார் உர விற்பனையாளர்கள் மட்டுமல்ல பெருமளவு விவசாயிகள் நம்பியிருக்கும் கூட்டுறவு சங்கங்களிலும் தேவையான உரத்தை வாங்கி வரும் விவசாயிகளிடம், லிக்யூட் உரம் என்ற தேவையில்லாத பொருட்களையும் திணிக்கும் செயல் பாடுகள் தொடர்கின்றன.
கடந்த அதிமுக ஆட்சியிலும் இந்த அவல நிலை இருந்த நிலையில், தற்போதைய திமுக ஆட்சியிலும் அதே நிலை தொடர்கிறது என்று நம்மிடம் குமுறுகிறார்கள் விவசாயிகள்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் சொந்த ஊரான மேல் குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜானகி இதுதொடர்பாக கூறுகையில், “ஒரு ஏக்கர் நெல் பயிர் செய்வதற்கு விதை நெல் வாங்குவது தொடங்கி, நாற்றங்கால் ஓட்டுதல், வரப்பு கழித்தல், மூன்று விதமாக உழவு ஓட்டுதல், நடவு செய்தல், மூன்றாம் நாள் யூரியா மற்றும் பாட்டாம்பாக்ஸ் உரம் போடுதல், களையெடுத்தல், இரண்டாவது களையெடுத்தல், மீண்டும் உரம் போடுதல், கதிர் வரும் நிலையில் பூச்சு மருந்து அடித்தல், அறுவடை செய்தல் என நெல்லை டிப்பரில் ஏற்றி வியாபாரி எடுத்து செல்லும் வரை மொத்த செலவுகளையும் பார்த்தால் 26,750 ரூபாய் ஆகிறது.
ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக விளையக்கூடிய நெல் 30 மூட்டைகள் ஆகும். அதுவே, எங்கள் பகுதியில் 25 மூட்டைக்கு மேல் விளையாது. ஒரு மூட்டை நெல் 900 முதல் அதிகபட்சமாக 1200 ரூபாய்க்குதான் வாங்குவார்கள். இதனால், விவசாயத்துக்கு செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியவில்லை. கௌரவத்துக்காக நிலத்தை கரம்பாக போட்டுவிடக்கூடாது என்று விவசாயம் செய்து கடன்காரர்களாகத்தான் ஆகிறோம்.
ஆனால் இந்த ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் விவசாயிகள் பெயரைச் சொல்லி கொள்ளையடித்து வருகிறார்கள். கூட்டுறவு சொசைட்டியிலும், தனியார் உரக் கடையிலும் உரம் வாங்கி பாருங்கள் நான் சொல்வது உங்களுக்குத் தெரியும்” என வேதனையுடன் கூறினார்.
அதன்படியே பண்ருட்டி வட்டம், சென்னை சாலை திருமலை நகரில் உள்ள சுபஸ்ரீ
செல்வ விநாயகர் ஸ்டோரில் யூரியா மற்றும் பாக்டாம்பாஸ் உரம் வாங்கச் சென்றோம்.
நாம் கேட்ட உரத்தை கொடுத்ததோடு, “விஜய் சிட்டி கம்போஸ்ட் ஆர்கானிக் ஃபெர்ட்டிலேசர்’ என்ற இன்னொரு மூட்டைக்கும் சேர்த்து பில் போட்டார் கடை உரிமையாளர்.
‘இது எதுக்குங்க? இதை நான் கேட்கவே இல்லையே?’ என்று நாம் கூற… ’இது வாங்கினால் தான் உரமும் கிடைக்கும். இது வேணாம்னா உரம் உங்களுக்கு கிடைக்காது. எங்க கடையில் மட்டும் இல்ல நீங்க எந்த கடைக்கு போனாலும் இதான் தான் சார் நிலைமை’ என்றார் உர விற்பனையாளர்.
“என்ன சார் சொல்றீங்க? எனக்கு தேவையான உரத்தை தானே நான் வாங்க முடியும்? அதுக்கும் சேர்த்து தான் பில் போட முடியும்னா உரம் வேண்டாம் சார்” என்று நாம் மீண்டும் சொல்ல…
‘”நாங்க என்ன செய்றது? விவசாயிங்க உரம் வாங்க வந்தா… இந்த மூட்டையையும் சேர்த்து விக்கச் சொல்லி எங்களுக்கு நெருக்கடி கொடுக்கறாங்க சார்” என்று தனது நிலைமையை எடுத்துச் சொன்னார் அந்த விற்பனை ஊழியர்.
தனியார் கடைகளில் தான் இப்படி இருக்கும் எனக்கருதி கடலூர் மாவட்டத்திலுளள வேளாண் கூட்டுறவு கடைக்கு சென்று ஒரு மூட்டை யூரியா கேட்டோம்.
அத்துடன் லிக்யூடு ஆர்கானிக் யூரியா என்ற ஒரு பாட்டிலையும் எடுத்து வைத்து அதற்கு கூடுதலாக 260 ரூபாய் சேர்த்து பணம் கேட்டார் விற்பனையாளர்.
“அந்த பாட்டில் வேண்டாம். நான் யூரியா மட்டும் தான் கேட்டேன்” என்று நாம் சொல்ல… ’யூரியா வாங்கணும்னா இதையும் வாங்கி தான் ஆகணும். யூரியா சப்ளை பண்ணும்போதே அதுக்கு ஏத்த மாதிரி இந்த பாட்டிலையும் சப்ளை பண்ணிட்டாங்க. அதனால யூரியா மூட்டை கணக்கு கொடுக்கும்போது இந்த பாட்டில் விற்பனையும் நாங்க கணக்கு காட்டணும்’ என்றார் வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர். அங்கே இருக்கும் அதிகாரிகள் வரை வாதாடிப் பார்த்தோம். ‘வேணும்னா சேர்த்து வாங்குங்க. இல்லேன்னா எதுவும் வாங்காமல் போங்க” என்று அவர்கள் கூற வேறு வழியே இல்லாமல், பின்னர் அந்த யூரியா பாட்டிலோடு சேர்த்து ஒரு உரமூட்டை வாங்கிவந்தோம்.
கடந்த அதிமுக ஆட்சியில் ‘டாப்டென் என்ற பெயரில் ஓர் ஆர்கானிக் உரத்தை விவசாயிகளின் அத்தியாவசிய உரங்களோடு திணித்து விற்றார்கள். இந்த திமுக ஆட்சியில் யூரியா லிக்யுட் என்றும் விஜய் ஆர்கானிக் ஃபெர்ட்டிலேசர் உரம் என்றும் விவசாயிகளிடம் கட்டாயமாக திணித்து வருகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சில கூட்டுறவு சங்க அதிகாரிகள், “தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து வரும் விவசாயிகளை நேரடியாக எதிர்கொள்வது நாங்கள்தான். ஆட்சி மாறினாலும் காட்சி மாறுகிறதே தவிர நிலைமை மாறவில்லை. சில பெரும் புள்ளிகளுக்கு வேண்டப்பட்ட
நிறுவனங்கள் இதுபோல ஆர்கானிக் உரம் என்று தயார் செய்து அவற்றை… மானிய விலையில் உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி திணிக்க சொல்கிறார்கள்.
உத்தரவு போடும் மேல் அதிகாரிகள் யாரும் விவசாயிகளை நேரடியாக எதிர்கொள்வதில்லை. ஆனால் நாங்கள் தான் இதை விவசாயிகளிடம் பதமாக பக்குவமாக சில நேரம் கடுமையாக எடுத்துச் சொல்லி விற்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மின்னம்பலத்தின் இந்த செய்தியை பார்த்தாவது முதல்வர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனம் திறந்து பேசினார்கள்.
விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் இரண்டாவது முறையாக போட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் விவசாயிகள் உரம் வாங்குவதற்கு என்று சிறப்பு பட்ஜெட் போட வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். இடு உரங்களை வாங்கலாம். கெடுபிடி உரங்களை விவசாயிகள் வாங்கத்தான் வேண்டுமா?
**-வணங்காமுடி**