{விஜயபாஸ்கர் ரெய்டு: செந்தில்பாலாஜி உதவினாரா?

politics

அதிமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரை மட்டும் குறிவைத்து 20 இடங்களில் ரெய்டு செய்து, வழக்கு பதிவுசெய்துள்ளது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, இதன் பின்னணியைப் பற்றியும், அடுத்ததாக முன்னாள் அமைச்சர்கள் மூவரைக் குறிவைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குநர் கந்தசாமி ஐபிஎஸ் பொறுப்பேற்ற குறுகிய நாட்களில் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் சொத்துக்கள் விபரங்கள் மற்றும் பினாமிகள் விபரங்களைச் சேகரித்து வந்தனர் லஞ்ச ஒழிப்புத் துறையினர், கூடுதலாக உளவுத்துறையும் பல விபரங்களையும் ஆதாரங்களையும் கண்டுபிடித்துக் கொடுத்தது.

இதன் அடிப்படையில்தான் முதலில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜூலை 22 என நாள் குறிக்கப்பட்டது. ஜூலை 21ஆம் தேதி, விஜிலென்ஸ் எஸ்.பி.சண்முகம் சென்னையிலிருந்து புறப்படும் முன்னர் 21 ஆம் தேதி இரவே, கன்னியாகுமரி முதல் சென்னை பார்டர் வரையில் 20 யூனிட் விஜிலன்ஸ் டீம்களை ஆங்காங்கே தயார்படுத்தினார்.

”உங்கள் யூனிட் காலையில் 3.00 மணிக்கு திருச்சிக்கு வந்ததுடனும்”, “உங்கள் யூனிட் கரூர் வந்துடனும்”, ”உங்கள் யூனிட் திருச்சி பக்கத்தில் வந்துடணும்” என இருபது டீம்களுக்கும் அசைன்மென்ட் கொடுத்தார் எஸ்பி.

ஒவ்வொரு யூனிட்டுக்கும் ஆறு போலீஸ், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு டிஎஸ்பி என மொத்தம் எட்டு பேர். கம்யூட்டர், பிரிண்டிங் மிஷின், தட்டச்சருடன் வரவேண்டும் என்றும், யாரும் முன்பே வந்து காத்திருக்கக் கூடாது, சரியான நேரத்துக்குதான் வரவேண்டும் என்றெல்லாம் தகவல் கொடுத்துக் கொண்டே 22 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு கரூர் விஜிலென்ஸ் அலுவலகத்தை அடைந்தார் எஸ்.பி. சண்முகம்.

காலை 4.30 மணிக்குத்தான் விஜிலென்ஸ் டீம்களுக்கு, ‘எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் ரெய்டு” என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மொத்தம் 20 யூனிட். எஸ்.பி.சண்முகத்தைச் சேர்த்து 161 பேர். 20 இடங்களில் ரெய்டுகளில் தனித்தனியாக சோதனையில் ஈடுபட்டார்கள். காலை 6.00 மணிக்குத் துவங்கிய ரெய்டு இரவு 11.30 மணிக்கு முடிந்தது. ஒவ்வொரு யூனிட்டுக்கும் தொடர்புகள் இல்லை. அவரவர் ரிப்போர்ட்களை தனித் தனியாக கொடுத்தார்கள்.

இறுதியில் கரூர் டிஎஸ்பி நடராஜ் வழக்குப் பதிவு செய்தார். (குற்ற எண் 5/2021) ஏ 1 எம்.ஆர் விஜயபாஸ்கர், ஏ2 விஜயலக்ஷ்மி விஜயபாஸ்கர், ஏ3 சேகர் (விஜயபாஸ்கர் தம்பி) என முதல் மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

எர்த் மூவர்ஸ், பஸ் ட்ராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், கான்ட்ராக்ட் போன்றவற்றில் பெருமளவு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதும், பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

மூன்று அமைச்சர்கள் வீடுகள் ரெய்டுஎன்று தகவல் வந்தது, பின் ஏன் ஒரே அமைச்சர் என ஆபரேஷன் சுருங்கியது என விஜிலென்ஸ் வட்டாரத்தில் பேசினோம்.

“தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் போதிய பணியாளர் ஸ்ட்ரெங்த் இல்லை. தமிழகம் முழுவதும் மொத்தம் 36 யூனிட்தான் உள்ளது. ஒவ்வொரு முன்னாள் அமைச்சருரையும் ரெய்டு செய்ய வேண்டுமென்றால் குறைந்தது 20 யூனிட் வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு செய்யவேண்டும் என்றால் 70 யூனிட் போலீஸ் வேண்டும். ஆனால் இருப்பதோ 36 யூனிட்தான்” என்ற எதார்த்தமான காரணத்தைச் சொன்னார்கள்.

இதற்கிடையில் இந்த ரெய்டை செயல்படுத்தியது லஞ்ச ஒழிப்புத்துறை என்றாலும், விஜயபாஸ்கரின் கரன்சி பாசன மேப்பை தெளிவாகக் கொடுத்தது செந்தில்பாலாஜிதான் என்கிறார்கள் கரூர் வட்டாரத்தில்.

“2011 -2016இல் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராகவிருந்த தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜியும் அதிமுகவின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் கடுமையான அரசியல் எதிரிகள். அதிமுகவில் இருக்கும்போதே யார் அமைச்சராவது என்ற போட்டியில் இருவரும் கடுமையாக காய் நகர்த்திக் கொண்டார்கள். 2016 தேர்தலில் செந்தில்பாலாஜி போட்டியிட்ட அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், கரூரில் ஜெயித்து அமைச்சராகிவிட்டார் விஜயபாஸ்கர். அதுமுதல் விஜயபாஸ்கரை உளவுபார்க்கவென்றே தனி டீம் வைத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. அதன் மூலம் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் எங்கெங்கு உள்ளன, அவரது பினாமிகள் யார் யார் போன்ற விவரங்களை எல்லாம் துல்லியமாக தயாரித்து ஃபைல் போட்டு வைத்திருந்தார். கடந்த தேர்தலில் கரூர் தொகுதியில் விஜயபாஸ்கரை தோற்கடித்து அமைச்சராகவும் ஆகிவிட்டார் செந்தில்பாலாஜி. இந்த நிலையில் தனது ஃபைலை எல்லாம் விஜிலென்ஸுக்கு கொடுத்திருக்கிறார் செந்தில்பாலாஜி. அதனால்தான் விஜயபாஸ்கரை குறிவைத்து இவ்வளவு இடங்களில் ஒரே நேரத்தில் விஜிலென்ஸ் வேட்டையாட முடிந்தது” என்கிறார்கள்.

ஆனால் நேற்று (ஜூலை 24 சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதன் அடிப்படையிலும், ஆளுநரிடம் அளித்துள்ள புகாரின் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியில், ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார். அதன்படிதான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேறு எதுவும் அரசியல் இல்லை” என்றார்.

எனினும் கரூர் திமுக, அதிமுக இரு கட்சியிலுமே, ‘பாம்பின் கால் பாம்பறியும், விஜயபாஸ்கரின் வில்லங்கங்களை செந்தில்பாலாஜி அறிவார்” என்று சொல்கிறார்கள்.

**-வணங்காமுடி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.