கறுப்பர் கூட்டம்: பழனி திமுகவின் பலே பாலிடிக்ஸ்!

politics

கறுப்பர் கூட்டம் பிரச்சினையை தமிழக பாஜக விடுவதாக இல்லை. நேற்று (ஜூலை 23) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் முருகன்,

திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை கண்டித்து எந்த கருத்தையும் கூறவில்லை. இதன் மூலம் கறுப்பர் கூட்டத்துக்கும் ஸ்டாலினுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லையென்றால், இந்து சமுதாய மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள். கறுப்பர் கூட்டத்தை நேரடியாக கண்டிப்பதற்கு அவருக்குத் தடையாக இருப்பது எது?” என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

இதேநேரம் இந்த விவகாரத்தில், ‘பழனி திமுக எம்.எல்.ஏ.வான ஐ.பி. செந்தில்குமாரின் ஆதரவாளர்கள், “திமுக தலைமை பழனி திமுக பாணியில் செயல்பட்டிருந்தால் இவ்வளவு தூரம் பிரச்சினை வந்திருக்காது” என்கிறார்கள்.

புகழ்பெற்ற முருக தலங்களில் ஒன்றான பழனி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ பி செந்தில்குமார் இந்தப் பிரச்சினை கிளம்பிய உடனேயே ஜூலை 16 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், “ஒன்றேகுலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை தன் உயிர்மூச்சாக கொண்ட அண்ணா, கலைஞர் வழியில் எங்கள் தலைவர். தளபதியார் அவர்களின் மக்கள் பணியானது நாடறிந்ததே. பண்பாடு, கலாச்சாரம் என்பது வேறு, மூடநம்பிக்கையை எதிர்ப்பது வேறு. வரலாற்றுச் சிறப்புமிக்க திருவாரூர் தேரை ஓட வைத்த தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் என்பது உலகமே அறிந்த விடயம்.

சில தினங்களுக்கு முன்பு திருமுருக நம்பிக்கையுடையோரை புண்படுத்தும் படியும்,தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தியும் கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பில் அங்கம் பெற்ற ஒருவர் தமிழ்க்கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இத்தனை நாட்களாக இல்லாமல் தேர்தல் நெருங்கும் சூழலில் இந்த இழிச்செயல் யாரால் தூண்டி விடப்பட்டிருக்கும் என்பது விரைவில் மக்களுக்கு தெரிய வரும். திமுக என்றுமே எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. பழனி சட்டமன்ற உறுப்பினர் என்ற பொறுப்புணர்வோடு இச்செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். இது திண்டுக்கல் மாவட்ட பொதுமக்களிடையேயும் பழனி மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஐ.பி.செந்தில்குமாரின் பேஸ்புக்கிலேயே, “இது வரவேற்கத் தக்கது. இதேபோல உங்கள் தலைமையும் செய்திருக்கலாம்’ என்று பலர் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள்.

நாம் பழனி வட்டாரத்தில் பேசினோம். “முருகனை கொச்சைப்படுத்தியவர்களை கண்டித்து பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அறிக்கை விட்டிருப்பது ஆறுதலான விஷயம்தான். ஆனால் இதிலும் அரசியல் இல்லாமல் இல்லை. பழனிமலை அடிவாரத்தில். முருகப்பெருமான் கோவிலை நம்பி கடைகள், விடுதிகள், ஹோட்டல்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் வாழ்வாதாரத் தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். மஞ்சக் கிழங்குத் தட்டு, தாலிக் கிழங்கு தட்டு, பூ விற்பனையில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருக்கிறார்கள். அதுபோல பழனிக்கு வெளியே அதேநேரம் பழனி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி போன்ற பகுதிகளில் இருந்து கொய்யாக் காய் உள்ளிட்ட பழங்கள் விற்பதற்காக தினந்தோறும் சுமார் ஐயாயிரம் பேர் பழனிக்குதான் வந்து செல்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்போது முருகன் கோவில் திறக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களைத் திட்டினால் கூட பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முருகனை ஏதேனும் சொன்னால் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்களின் கோபம் தன் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்கிறார் செந்தில்குமார்.

மீண்டும் பழனி சட்டமன்ற தொகுதியில் மலையேற ஆசைப்படும் செந்தில்குமார் தேர்தல் சமயத்தில் எதிர்க்கட்சிகள் முருகன் சர்ச்சையை தனக்கு எதிராகப் பயன்படுத்தி விடக்கூடாது என்பதால் அழகாக முந்திக் கொண்டார். முருகன் விஷயத்தை பாஜக அதிமுக ஆகியவை அரசியலுக்காக கையிலெடுக்கும் போது திமுகவும் அதை கையில் எடுத்தால் தவறில்லையே. செந்தில்குமாரின் புத்திசாலி தனம் திமுக தலைமைக்கு இல்லாமல் போய்விட்டதே”” என்கிறார்கள் பழனி திமுகவில் சில நிர்வாகிகளே.

**-ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *