சசிகலா சிறையிலிருந்தபோது சொகுசு வசதிகளுக்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கைமாறிய வழக்கில் இரண்டு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படைக்குக் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்குச் சொகுசு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக அப்போது கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சிறையில் விதிகளை மீறி சசிகலாவுக்குத் தனி சமையல் அறை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்ததாகவும் இதற்காக 2 கோடி ரூபாய் வரை கைமாறியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையிலான குழு இந்த புகாரை உறுதி செய்தது. இதையடுத்து கர்நாடக ஊழல் தடுப்பு படை சசிகலா மீது 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் இவ்விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில் சசிகலா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படைக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி, ஊழல் தடுப்பு படை போலீசார் சீலிடப்பட்ட கவரில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 2 மாதம் கால அவகாசம் வேண்டுமென்று ஊழல் தடுப்பு படை போலீசார் அவகாசம் கேட்டனர்.
2 மாதம் கால அவகாசம் வழங்க மறுத்த நீதிமன்றம் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியது. இந்த கால அவகாசத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனில் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அக்டோபர் 10ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உள்துறை செயலாளரின் நெருங்கிய உறவினர் இறந்து விட்டதால் அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சமூக ஆர்வலர் கீதா தாக்கல் செய்த மனு நேற்று தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உள்துறை செயலாளர் சார்பில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்துறை அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்குள் அவரது அனுமதி பெற்று முழுமையான குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தது. ஒருவேளை இரண்டு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
**-பிரியா**
�,