கர்நாடகாவில் ‘அல்லாஹு அக்பர்’ என மாணவி முழங்கியதன் பின்னணியில் தூண்டுதல் எதுவும் உள்ளதா என்று கர்நாடக கல்வித் துறை அமைச்சர் கேள்வி கேட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே செல்கிறது. ஹிஜாப் – காவி சால்வைப் போராட்டம் வன்முறையாக மாற ஆரம்பித்ததையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு பிப்ரவரி 11ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் இரண்டு வாரங்களுக்குக் கல்வி நிறுவனங்கள் அருகே போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த காவல் துறை தடை விதித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், நேற்று முன்தினம் கர்நாடகாவில் உள்ள மாண்டியா நகரில் பிஇஎஸ் கல்லூரியில் இஸ்லாமிய மாணவி ஒருவர், வழக்கம்போல் பர்தா அணிந்து கொண்டு கல்லூரிக்கு வந்தார். அப்போது, காவி சால்வை அணிந்திருந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், அந்த மாணவியைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பினர். அந்தக் கூட்டத்துக்குச் சிறிதும் பயப்படாத மாணவி, அவர்களுக்கு எதிராக, ‘அல்லாஹு அக்பர்’ என்று முழங்கினார். இருப்பினும், ‘ஜெய் ஶ்ரீராம்’ என்று, முழக்கமிட்டபடி, காவி சால்வை அணிந்த மாணவர்கள் மாணவியைப் பின் தொடர்ந்து சென்றனர்.
இதையடுத்து, அங்கு வந்த கல்லூரி விரிவுரையாளர், அந்த மாணவர்களை கலைந்து போகச் சொல்லி, மாணவியைப் பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் தொடர்ந்து வைரலாகி வருகிறது. பலரின் முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பின் முகப்பு படமாக மாறும் அளவுக்கு அந்த வீடியோ பரவி வருகிறது.
ஒற்றை ஆளாக இருந்து காவி சால்வைக்கு எதிராக முழக்கமிட்டதற்கு மாணவியைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான ஜாமியத் உலமா-இ-ஹிந்த், கர்நாடகா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து ‘அல்லாஹு அக்பர்’ என்று கோஷமிட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்தது. இப்படிப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகையில், மாணவி முழக்கமிட்டதன் பின்னணியில் எதுவும் உள்ளதா என்று கர்நாடக கல்வித் துறை அமைச்சர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த கல்வித் துறை அமைச்சர் பி.சி.நாகேஷ், “மாண்டியாவில் வெளியே இருந்து கல்லூரிக்குள் வந்து கொண்டிருந்த மாணவியை காவி சால்வை அணிந்திருந்த மாணவர்கள் சுற்றி வளைக்கவில்லை. ஆனால், அவர் திடீரென அல்லாஹு அக்பர் என்று ஏன் குரல் எழுப்பினார்? அந்த மாணவியைச் சுற்றி அப்போது ஒரு சக மாணவி கூட இல்லை. பள்ளி வளாகத்தில் அப்படியொரு முழக்கத்தை எழுப்ப அவருக்கு என்ன அவசியம்? மாணவி தூண்டப்பட்டாரா? கல்வி நிலையத்தில் ’அல்லாஹு அக்பர்’ அல்லது ‘ஜெய் ஸ்ரீராம்’ போன்ற முழக்கங்களை ஊக்குவிக்க முடியாது. சட்ட ஒழுங்கை யாரும் கையில் எடுக்க முடியாது. எந்தவொரு தவறான நபரையும் அரசு விடாது” என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் ‘அல்லாஹு அக்பர்’ என குரல் எழுப்பிய மாணவியின் பெயர் முஸ்கான் என தெரியவந்துள்ளது. இதற்குப் பதிலளித்துள்ள மாணவி முஸ்கான், “நான் புர்கா அணிந்து கல்லூரிக்குள் நுழைய முயன்றபோது, என்னை எதிர்க்கும் வகையில் அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கத்த ஆரம்பித்தனர். அதனால், நான் அல்லாஹு அக்பர் என்று கத்த ஆரம்பித்தேன். கல்லூரி முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள் என்னை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அங்கிருந்தவர்களில் 10 சதவிகிதம் பேர்தான் எங்கள் கல்லூரி மாணவர்கள். மற்ற அனைவரும் வெளியாட்கள்” என்று விளக்கமளித்துள்ளார்.
ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்த நிலையில், நேற்று அதே அமைப்பின் தலைமையில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் நூற்றுக்கணக்கான மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தெலங்கானாவிலும் முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
**இன்று விசாரணை**
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ண தீட்சித், “இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு மாற்றப்படுகிறது. கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட அமர்வை அமைப்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார்” என்று உத்தரவிட்டார்.
தனி நீதிபதி பரிந்துரையை ஏற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி நேற்றிரவு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், ஹிஜாப் விவகார வழக்கு தொடர்பாக எனது தலைமையில் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜிவுல்லா முகைதீன் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 10) மதியம் 2.30 மணிக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**
yமாணவி கோஷம்: கல்வி அமைச்சரின் சர்ச்சை பேச்சு!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel