காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் தென்சென்னை மாவட்டத் தலைவரும், முன்னாள் சென்னை பொறுப்பு மேயருமான கராத்தே தியாகராஜன் அதிமுகவில் சேர்கிறாரா என்ற பரபரப்பு மீண்டும் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.
கராத்தே தியாகராஜன் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இம்முறை பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த், சிதம்பரம், திருநாவுக்கரசர் என வழக்கமாக கராத்தேவுக்குக் கிடைக்கக் கூடிய வாழ்த்துகளோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்தும் கிடைத்துள்ளது. இதுதான் அரசியல் வட்டாரத்தில் யூகங்களைக் கிளப்பியுள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று இன்னமும் எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், அதன் மீதான நம்பிக்கை அரசியல் ரீதியான காரணங்களால் ஒருபக்கம் குறைந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில் முக்கியமான நபராக இருக்கக் கூடிய கராத்தே தியாகராஜனை அதிமுகவுக்கு இழுக்கும் முயற்சிகளும் நடப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தனது போட்டியாளரான திமுகவின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் மீது அரசியல் ரீதியாக கடுமையான புகார்களைக் கூறிக் கொண்டிருக்கிறார். இதற்கு பலம் சேர்க்கும் விதமாக கராத்தே தியாகராஜன் இருப்பார் என்று அதிமுக கருதுகிறது. ஸ்டாலினுக்கு எதிரான பிரச்சாரம் பீரங்கியாக கராத்தே தியாகராஜனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறது அதிமுக.
சமீபத்தில் நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு விழாவை திமுக கொண்டாடியபோது, ‘12.01.2000 அன்று நாவலர் நெடுஞ்செழியன் மறைந்துபோனார். அப்போது முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, முதல்வராக இருந்த கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதினார். மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் அவர்களை அண்ணா அவர்களுக்கு பக்கத்தில் அடக்கம் செய்ய இடம் கேட்டு அந்தக் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார். அன்றைய நாடாளுமன்ற அதிமுக தலைவர் பி.ஹெச்.பாண்டியன், அப்போதைய முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ரகுபதி ஆகியோர் அன்றைய தலைமைச் செயலாளர் ஏ.பி.முத்துசாமியை நேரில் சந்தித்து அந்தக் கடிதத்தைத் தந்தார்கள். ஆனால் அன்றைய திமுக அரசு அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது. பிறகு பெசன்ட் நகர் மயானத்தில் நாவலர் உடல் தகனம் செய்யப்பட்டது.
நாவலர் மறைந்து ஒரு வாரம் சென்ற பிறகு 20-01-2000 அன்று நடந்த சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நாவலர் நெடுஞ்செழியன், முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா ஆகியோரது மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற அன்றைய மேயர் ஸ்டாலின் அலுவலகத்தில் நான் காங்கிரஸ் சார்பாக மனு கொடுத்தேன். 20ஆம் தேதி நடந்த கூட்டத்தில் பிரபல தொழிலதிபர் எம்.ஏ. சிதம்பரம், திமுக மன்ற உறுப்பினர் தாமோதரன் ஆகிய இருவருக்கு மட்டும் இரங்கல் தெரிவித்துவிட்டு கூட்டத்தை ஸ்டாலின் ஒத்தி வைத்தார். காரணம் கேட்டேன், மரபு இல்லை என்று சொல்லிவிட்டார் மேயர் ஸ்டாலின்.
இப்படி நாவலரை எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவு அவமானப்படுத்திவிட்டு, இன்று அவரது படத்தை அறிவாலயத்தில் திறந்து வைப்பதாக அதிமுக அரசை குறை கூறி ஸ்டாலின் அரசியல் செய்கிறார். மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தார் கராத்தே தியாகராஜன்.
இப்படி ஸ்டாலினுக்கு எதிரான விஷயங்களை கராத்தே மூலமாக கச்சிதமாக வெளியிட்டு ஸ்டாலினை பலவீனப்படுத்தலாம் என்று கருதுகிறது அதிமுக.
ஆனால், அதிமுகவில் தான் சேர்வது பற்றி வரும் தகவல்களை கராத்தே தியாகராஜன் தரப்பில் மறுத்து வருகிறார்கள். அதேநேரம் ரஜினி ஒருவேளை அரசியலுக்கு வரும் திட்டத்தை ஒத்தி வைத்தாலோ, அல்லது கைவிட்டாலோ கராத்தேவின் , ‘ஸ்டாலின் எதிர்ப்பு சக்தியை’ பயன்படுத்திக் கொள்ள அதிமுக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதன் வெளிப்பாடுதான் கராத்தேவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாள் வாழ்த்து என்கிறார்கள்.
**-வேந்தன்**
�,”