கனிமொழி புகார்: விமான நிலையங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்!

Published On:

| By Balaji

சென்னை விமான நிலையத்தில் மக்களவை உறுப்பினர் கனிமொழியை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ஒருவர், நீங்கள் இந்தியரா எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொன்னதற்காக இவ்வாறு அந்த அதிகாரி கூறியதாக கனிமொழி குறிப்பிட்டார். இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, எந்தவொரு மொழியையும் வலியுறுத்துவது தங்களின் கொள்கை அல்ல எனவும் சிஐஎஸ்எஃப் விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பணியாளர்களை அதிகளவில் நியமிக்க சிஐஎஸ்எஃப் முடிவு செய்துள்ளது. அதாவது, பயணிகளை கையாளுவதற்காக உள்ளூர் மொழியை நன்கு தெரிந்த பணியாளர்களை விமான நிலையங்களில் நியமிக்கிறது.

ஸ்கிரீனிங், சோதனை மற்றும் பிற முன்னணி பணிகளுக்கு முடிந்தவரை உள்ளூர் மொழி தெரிந்த அதிகமான பணியாளர்களை நியமிக்க சிஐஎஸ்எஃப் முயற்சிக்கும். ஆனால், இதுபோன்ற பணிகளில் 100 சதவிகிதம் உள்ளூர் மொழி தெரிந்தவரை நியமிக்க முடியாது என சிஐஎஸ்எஃப் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிஐஎஸ்எஃப் டிஐஜியும், முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியுமான அனில் பாண்டே, “பயணிகளின் உணர்வுகளை மதிக்க நாங்கள் உரிய கவனம் செலுத்துகிறோம். இருபது வருடங்களாக உள்நாட்டு பாதுகாப்பை வழங்குவதிலும், விமான நிலையங்களில் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதி செய்வதிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். வி.ஐ.பிக்கள், மக்கள் பிரதிநிதிகள், மற்றவர்கள் என யாராக இருந்தாலும் பாதுகாப்பு விதிமுறைகளை உறுதிசெய்யும் அதே வேளையில் அனைவரையும் கண்ணியத்துடன் கையாளுகிறோம்” என்று விளக்கம் அளித்தார்.

தகவல் தொடர்பில் தவறான புரிதல்கள் ஏற்படுவதற்கான சாத்தியத்தை ஒப்புக்கொண்ட அவர், “முடிந்தவரை, தகவல் தொடர்புகளில் அத்தகைய இடைவெளி இல்லை என்பதை உறுதிப்படுத்த நாங்கள் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றும் உறுதியளித்தார்.

தகவல் தொடர்பிலுள்ள சிக்கல்களைத் தவிர்க்க உள்ளூர் மொழி அறிவைக் கொண்ட அதிகமான ஊழியர்கள் பணியில் அமர்த்தலாம் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

“ஊழியர்களுக்கும் பயணிகளுக்கும் இடையில் எந்தவொரு உரையாடலுக்கும் எந்த அவசியமும் இல்லை. ஒரு பயணிகளின் உடமைகளை சரிபார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களில் மட்டுமே தகவல் தொடர்பு இருக்கலாம். ஆனால் அப்போதும் கூட, ஊழியர்கள் அடிப்படை கேள்விகளை மட்டுமே கேட்பார்கள். பயணிகளுக்கு இந்தி தெரியாவிட்டால், ஊழியர்கள் ஆங்கிலம் அல்லது உள்ளூர் மொழியைப் பேசினால் எளிதாக இருக்கும்”என்று ஒரு விமான நிலைய அதிகாரி கூறினார்.

ராஜதானி, சதாப்தி, துரந்தோ மற்றும் தேஜஸ் போன்ற பிரீமியம் ரயில்களிலும் இதேபோன்ற தகவல் தொடர்பு சிக்கல்களை இந்திய ரயில்வே எதிர்கொள்கிறது. அங்கு கேட்டரிங் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் பொதுவாக தென்னிந்தியாவுக்கு வெளியில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கிறார்கள். மொழி தொடர்பான புகார்களை அடுத்து, உள்ளூர் மொழி தெரிந்த பணியாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஐஆர்சிடிசிக்கு ஏற்பட்டது.

**கனிமொழி நன்றி**

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “நமது உணர்வுகளை புரிந்துகொண்டு தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்ததற்கு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் நன்றி. இது இங்குமட்டுமல்ல இந்தியா முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கும் பிரச்சினை.” எனத் தெரிவித்தார்.

தனக்கு இந்தி தெரியும் என்றும், துணை பிரதமர் தேவிலால் உரையை மொழி பெயர்த்தாகவும் வந்த தகவல் குறித்து பதிலளித்த அவர், “நான் இதுவரை யாருக்கும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குக் கூட மொழிமாற்றம் செய்தது கிடையாது. எனக்கு இந்தி தெரிந்தால் தான் என்னால் மொழிமாற்றம் செய்ய முடியும். நான் படித்த பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிதான். டெல்லிக்குச் சென்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் நான் இன்னும் இந்தி கற்றுக் கொள்ளவில்லை. அனைத்து தலைவர்களுக்கும் இது தெரியும். அப்படி நான் மொழி பெயர்த்ததாகக் கூறினால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share