கனகராஜ் மரணம்: மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

Published On:

| By Balaji

ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் கொலை வழக்கில் நேற்று முதல் மீண்டும் விசாரணை தொடங்கியது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மீண்டும் கொடநாடு வழக்கு வேகமெடுத்துள்ளது. கொடநாடு வழக்கைப் பொறுத்தவரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகத்திற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இவ்வழக்கைப் பொறுத்தவரை ஒரு டீம் திசை திருப்புவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து மின்னம்பலத்தில், [கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! வழக்கைத் திசை திருப்ப முயற்சி செய்கிறதா ஒரு டீம்?](https://minnambalam.com/politics/2021/09/21/8/Kodanadu-Incident-summoned-to-Ilangovan) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

கனகராஜ் வழக்கில், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி கலைவாணியும், அண்ணன் தனபாலும் கூறி வந்த நிலையில், நேற்று முதல் கனகராஜ் கொலை தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கியது.

சேலம் எஸ்பி அபிநவ் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கனகராஜ் மரண வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆத்தூர் அருகே சக்தி நகரில் உள்ள கனகராஜின் உறவினர் ரமேஷ் வீட்டுக்கு சென்ற 20க்கும் மேற்பட்ட போலீசார், ரமேஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

அதுபோன்று டிஎஸ்பி ராமச்சந்திரன், கனகராஜ் விபத்துக்குள்ளான இடத்தையும், காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விபத்துக்குள்ளான வாகனத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து நடந்த அன்று, வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார் யார்? என்பது குறித்தும் கேட்டறிந்து விசாரணையில் ஈடுபட்டார்.

மேலும், தனிப்படை போலீஸார் ஆத்தூரில் முகாமிட்டு கனகராஜ் மரணம் குறித்து, அவருடன் தொடர்பிலிருந்தவர்கள், அவரது சகோதரர் தனபால் மற்றும் வழக்குக்குச் சம்பந்தமான நபர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share