@அமித்ஷாவின் 7 கேள்விகள்!

Published On:

| By Balaji

கேரளாவில் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாகக் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஏழு கேள்வி கேட்டுப் பதிலளிக்கக் கோரி பிரச்சாரம் செய்தார்.

நேற்று (மார்ச் 7) பகலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருவனந்தபுரத்தில் உள்ள சங்கு முகம் கடற்கரையில் பாஜகவின் மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் தலைமையிலான ‘விஜய யாத்திரை’ என்ற பிரச்சார பேரணி நடந்தது. விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுத் தேர்தல் பிரச்சார உரையாற்றினார்.

அவர் பேசியதாவது, “கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்கள் பாஜக வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்கவேண்டும்

அந்நிய செலாவணி கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் அலுவலகத்தில் உங்களுக்கு (பினராயி விஜயன் கீழ்) வேலை பார்த்தாரா? இல்லையா?

அந்த நபருக்கு ரூ.3 லட்சம் ஊதியம் வழங்கப்பட்டதா? இல்லையா?

உங்கள் முதன்மைச் செயலராக இருந்தவர் அந்தப் பெண்ணுக்குப் போலிச் சான்றிதழ் வழங்கி அரசுத் திட்டத்தில் பணிபுரிந்திட முக்கிய பொறுப்பில் பணியமர்த்தினாரா? இல்லையா?அந்தப் பெண் உங்கள் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வந்தாரா?

வெளிநாட்டுப் பயணங்களின்போது அந்தப் பெண்ணை அரசு அதிகாரிகள் உடன் அழைத்துச் சென்றனரா? இல்லையா?

சட்டவிரோதமாகக் கடத்திவரப்பட்ட தங்கம் விமான நிலையத்தில் பிடிபட்டபோது அதுதொடா்பான விசாரணையில் சுங்கத்துறைக்கு உங்கள் அலுவலகம் அழுத்தம் தந்ததா? இல்லையா?

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, சுங்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டனர். அதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டதா?

மத்திய விசாரணை அமைப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசியல் கருவிகள் போல் செயல்படுகின்றன என நீங்கள் குற்றம்சாட்டினீா்கள். தற்போது நான் இந்தக் கேள்விகளை முன்வைத்துள்ளேன். இந்தக் கேள்விகளுக்கு மாநில முதல்வரான நீங்கள்(பினராய் விஜயன்) பதிலளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்” என்றாா்.

தொடர்ந்து பேசிய அமித் ஷா, இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சியில் அரசியல் வன்முறையின் களமாகக் கேரளம் மாறியுள்ளதாகவும் விமர்சித்தார். பொதுக் கூட்டத்தின் போது கேரள மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான தேவன் பாஜகவில் இணைந்தார். அவரைத் தவிர, ராதா, முன்னாள் அதிகாரி கே.வி.பாலகிருஷ்ணன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாண்டலம் பிரதாபனும் அமித்ஷா முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இங்குள்ள திருவனந்தபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் பிரார்த்தனை செய்து கேரளாவில் உள்ள பல்வேறு இந்து மதங்களின் தலைவர்களையும் நேற்று சந்தித்தார். கட்சியின் அலுவலக பொறுப்பாளர்களின் முக்கிய குழு கூட்டத்திலும் அமித்ஷா கலந்து கொண்டார்.

மாநில தலைநகரில் உள்ள சாஸ்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமத்தில் மாநிலம் முழுவதும் இருந்து 27 மட்ஸின் பிரதிநிதிகளையும் சந்தித்தார். பின்னர், இரவு அவர் டெல்லி திரும்பினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தின் பெயரில் சட்டவிரோதமாகக் கடத்திவரப்பட்ட தங்கம் பிடிப்பட்டது. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), சுங்கத்துறை, அமலாக்கத்துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கு தொடா்பாக ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமனுக்கு அமெரிக்க டாலா்கள் கடத்தப்பட்ட வழக்கொன்று தொடர்பாகவும் ஸ்வப்னா சுரேஷிடம் சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அதில் டாலா்கள் கடத்தல் வழக்கில் முதல்வா் பினராயி விஜயன், சில அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு தொடர்புள்ளது என்று ஸ்வப்னா சுரேஷ் கூறியதாக சுங்கத்துறை அண்மையில் தெரிவித்தது. இதுதொடர்பாக என்ஐஏவும் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

**-சக்தி பரமசிவன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share