காமராஜர் பிறந்தநாள்- கே.எஸ். அழகிரியின் புது முழக்கம்!

Published On:

| By Balaji

பெருந்தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாள் வரும் ஜூலை 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (ஜூலை 9) ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன்படி காமராஜர் பிறந்தநாளை தமிழகம் மீட்பு நாளாக கொண்டாட வேண்டும் என்று காங்கிரஸாருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அழகிரி.

“பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் கல்வியில் புரட்சி நடந்தது. மதிய உணவுத் திட்டம், தொழில் வளர்ச்சி, மின் துறையில் சாதனைகள், பாசனத் திட்டங்கள், நில சீர்திருத்தங்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதி என சாதனைப் பட்டியலை படைத்த பெருமை அவருக்கு உண்டு. அதனால்தான் காமராஜரது ஆட்சிக் காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்து பாராட்டுகிறார்கள். மூவேந்தர்கள் ஆட்சியில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் காமராஜர் ஆட்சிக் காலத்தில் நடந்ததாக போற்றுகிறார்கள்.

விடுதலைக்குப் பிறகு தமது வளர்ச்சித் திட்டங்கள் மூலம் முதல் முறையாக தமிழகத்துக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். பெருந்தலைவர் ஆட்சியை இன்றைய ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது பொறுக்க முடியாத வேதனையில் நெஞ்சு விம்முகிறது. இன்று ஆடம்பரம், ஊதாரித்தனம், சுயநலம் மிக்க அராஜக மக்கள் விரோத ஊழல் ஆட்சி நடக்கிறது. காமராஜர் ஆட்சியில் தலை நிமிர்ந்த தமிழகம் இன்று அனைத்து துறைகளிலும் தாழ்ந்த தமிழகமாக தலை குனிந்து நிற்கிறது.

எனவே தாழ்ந்த தமிழகத்தை தலை நிமிரச்செய்ய இழந்த பெருமைகளை மீட்க, பெருந்தலைவர் காமராஜர் நிகழ்த்திய பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திடும் வகையில் மக்கள் விரோத ஊழல் சக்திகளிடம் இருந்து தமிழகத்தை மீட்டு நல்லாட்சி அமைத்திட, பெருந்தலைவர் பிறந்தநாளை… மாவட்ட, வட்டார, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகள் தமிழகம் மீட்பு நாளாகவும், அதற்கான உறுதிமொழி ஏற்பு நாளாகவும் கொண்டாட வேண்டும். வரும் ஜூலை 15 காலை 11 மணிக்கு காமராஜர் படத்தை அலங்கரித்து மலர் தூவி மரியாதை செலுத்த வேண்டும். தொடர்ந்து அவரது படத்தின் முன் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் உறுதிமொழியினை ஏற்க வேண்டும்” என்று கூறியிருக்கும் கே.எஸ். அழகிரி,

“பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் நடந்த பொற்கால ஆட்சி முறையை மீண்டும் அமைத்திடுவோம். மக்கள் விரோத ஊழல் சக்திகளிடம் இருந்து தமிழகத்தை மீட்டிடுவோம். மீண்டும் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைந்திட, தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்றிட பெருந்தலைவர் பிறந்தநாளில் உறுதியேற்போம்” என்று உறுதிமொழியையும் வெளியிட்டிருக்கிறார்.

“தமிழக காங்கிரஸ் சார்பில் இதுவரை காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்திருந்தாலும், இப்படி ஒரு முன் மாதிரியான முழகக்தை வைத்து கொண்டாடப்பட்டதில்லை. திமுக ஆட்சியில் கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் அப்போதைய முதல்வர் கலைஞர். அதைச் சொல்லியே காங்கிரசாரும் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்,. அழகிரி, காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் சார்பில் தனித் தன்மையோடு கொண்டாட வேண்டும் என்று சில முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில், தமிழகம் மீட்பு நாளாக காமராஜர் பிறந்தநாளை அறிவித்து, ராஜீவ் காந்தி பிறந்தநாள் போல காமராஜர் பிறந்தநாளிலும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்” என்கிறார்கள் அழகிரிருக்கு நெருக்கமான காங்கிரஸ் நிர்வாகிகள்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share