மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தேர்தலை முன்னிட்டு கோவையில் முகாமிட்டுள்ள கமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
காலையில் மக்களோடு மக்களாக வாக்கிங் செல்லும் கமல், சாலையோர கடைகளில் தேநீர் அருந்துவதும், ஹோட்டல்களுக்கு விசிட் அடிப்பதும், மாணவர்களைச் சந்திப்பதுமாக இருந்து வந்தார்.
இவ்வாறு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த கமல் இன்று காலை கோவை பூ மார்க்கெட், ஆர்எஸ் புரம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருடன் பேசவும் செல்பி எடுக்கவும் பலர் ஆர்வத்துடன் திரண்டனர். அப்போது கூட்டத்திலிருந்தவர்கள் யாரோ கமலின் காலை தெரியாமல் மிதித்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக சமீபத்தில் கமல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட வலது காலில் மிதித்துள்ளனர். இதனால் கமலுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு கமலுக்கு ஓய்வு அவசியம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் கமலின் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகவும், மற்ற நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு, சிங்காநல்லூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மட்டும் அவர் கலந்துகொள்வார் என்றும் மக்கள் நீதி மய்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கமல் விரைவில் நலம்பெற வேண்டும் என்று கோவை தெற்கில் கமலை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ கோவை பகுதியில் விருந்தினராக வந்து இருக்கும் கமல்ஹாசன் அவர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஓய்வில் இருப்பதாக நான் அறிந்தேன். அவர் விரைவில் குணமடையக் கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் மூலம் ஒரு பழக்கூடை அனுப்பியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
**-பிரியா**
�,”