மநீமவின் மக்கள் பணி தொடரும்: கமல்

Published On:

| By Balaji

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஓர் இடம் கூட வெற்றிபெறாத நிலையில், அதன் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, சமக மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் இந்தக் கூட்டணி தேர்தலில் படு தோல்வி அடைந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து, அக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த பலரும் கட்சியை விட்டு சென்றனர்.

இந்த நிலையில், ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடந்தது. வாக்கு எண்ணிக்கையும் இரண்டு நாட்களாக நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது. ஆனால், மக்கள் நீதி மய்யம் கட்சியால் இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இது அக்கட்சி தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபோன்று, நாம் தமிழர் கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், ‘உள்ளாட்சியில் தன்னாட்சி’ எனும் லட்சியக் கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share