�சீருடை பணியில் பெண்களுக்கு 50சதவிகிதம் ஒதுக்கீடு: தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கமல்

Published On:

| By Balaji

தமிழக தேர்தல் களம் பரபரப்பாகக் காணப்படுகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். இளைஞர்கள், பெண்கள், விளையாட்டிற்கான செயல்திட்டங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

அதில், இளைஞர்களின் நலனுக்காக 7 செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

“மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அரசு அமையும் போது 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஆட்சிக் காலத்திற்குள் உறுதி செய்யப்படும். அனைத்து பட்டதாரிகளுக்கும் வசிப்பிடத்திலிருந்து 100 சதுர கிலோ மீட்டர் தொலைவிற்குள் பணி உத்தரவாதம் வழங்கப்படும். வேலையை நீங்கள் தேடாதீர்கள் வேலை உங்களைத் தேடி வரும்.

வேலை இல்லாத இளைஞர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் வாழும் சூழலின் தேவை அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும். ஒரு இளைஞர் 5க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கினால் அவர் சிறப்பு நிதி சலுகைகள் பெறுவதற்குத் தகுதி உடையவர் ஆகிறார். முதல்முறை தொழிலாளர்களுக்கு வட்டியில்லா மின் பைக்குகள் வழங்கப்படும்.

தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்படும் விதமாக வேலையில்லா கால ஊதியம் மற்றும் விபத்து காப்பீடு வழங்கப்படும்.

தேசிய மற்றும் மாநில அளவில் உள்ளேயும் வெளியேயும் கல்விக்காகவும், திறமைக்காகவும் இளைஞர்கள் பரிமாற்றம் ஊக்குவிக்கப்படும்” என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு மேம்பாட்டிற்கான திட்டங்களில், மக்களிடையே ஒழுக்கம், நேர மேலாண்மை மற்றும் உடற்பயிற்சி ஆகிய நற்பண்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆரோக்கியமான தமிழகம் இயக்கத்தை அரசுப் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் வீடுகளிலிருந்து தொடங்கி மக்கள் நீதி மையம் வழி நடத்தும்.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களை தமிழ்நாட்டிலிருந்து வெளிக்கொண்டு வருவதற்கு பொது – தனியார் கூட்டு முயற்சியில் ஒவ்வொரு பஞ்சாயத்து ஒன்றிய அளவிலும் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகம் நிறுவப்படும். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் விளையாட்டு வசதிகள் மற்றும் நல்லிணக்க பூங்காக்கள் அமைக்கப்படும்.

மனிதநேய சர்வதேச பார்வையாளர்கள் விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாற்றப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வழியில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தேசிய அளவிலான விளையாட்டுகளின் அடிப்படையில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளின் வரிசை முறை ஒழுங்கமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டி நடத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான செயல்திட்டம் குறித்த அறிவிப்பில், “அரசு சேவையில் இருக்கும் ஒவ்வொரு சீருடை துறையிலும் 50 சதவிகித பெண்கள் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும்.

துன்பத்தில் இருக்கும் பெண்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு என்று அவசரக் கால இலவச விடுதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைக்கப்படுவதுடன், ’181’ என்ற பெண்கள் உதவி எண்ணில் பதிவு செய்யப்படும் புகார்கள் அனைத்தும் தொடர்ந்து கண்காணிக்கும் செயல்முறை நிறுவப்படும்.

பெண்களுக்கான சுகாதார நாப்கின்களை அரசாங்கமே கொள்முதல் செய்து கிராம மற்றும் நகர்ப்புற ஏழைப் பெண்கள் மற்றும் இளம் பருவ பெண் குழந்தைகளுக்கு பொது வினியோக முறையில் வழங்கப்படும்.

பெண்களால் பெண்களுக்காகப் பெண்களுக்கு என்று இயங்கும் மகளிர் வங்கி உருவாக்கப்படும். கல்வி வேலைத் திறன் மேம்பாடு மற்றும் சமூக பொருளாதார ஆதரவு போன்ற அனைத்து உதவிகளும் தனித்து வாழும் தாய்மார்களுக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.

அரசாங்கம் தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது இடங்களில் பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வழங்குவது உறுதி செய்யப்படும்.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது அனைத்து பெண்களுக்கும் இலவச ஆரோக்கியம் மற்றும் கருத்தரிப்பு பரிசோதனை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்யும் என்று கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சீருடைப் பணியில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் உள்ளிட்ட செயல்திட்டங்கள் பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share