oகணினி கொடுப்பது இலவசம் அல்ல முதலீடு: கமல்

Published On:

| By Balaji

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று (மார்ச் 17) ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் அந்தக் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டுகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அதிமுகவையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசிய கமல், “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், ஏழைகள் இல்லாத நிலையை உருவாக்கினார்களா? தமிழ் மொழியைக் காப்பாற்றிவிட்டார்களா? இந்தி ஒழிக என்று சொல்வது பிறப்புரிமை அல்ல, தமிழ் வாழ்க என்று சொல்வதுதான் பிறப்புரிமை” என்றார்.

ஆரம்பப் பள்ளிகள் எல்லாம் மோசமாகிவிட்டது என்று குற்றம்சாட்டிய கமல், கடந்த தேர்தலில் 39 பேர் வெற்றி பெற்றார்கள் என மார்தட்டிக் கொண்டார்கள். அந்த 39 தொகுதியில் என்ன முன்னேற்றம் நடந்தது என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த தலைமுறையினரின் வாழ்க்கை மலர வேண்டும், நாளைய சரித்திரத்தை மாற்ற வேண்டும். பெரிய தலைவர்கள் இல்லை என்ற ஏக்கம் எனக்கு இருக்கிறது. இந்த நிலை இன்றைய குழந்தைகளுக்கு இருக்கக் கூடாது. பல தனியார் மருத்துவமனைகளைக் காட்டிலும் அதிக முதலீடு போடும் அரசு மருத்துவமனைகள் உருப்படி இல்லாதவையாக இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் இன்று ஏழு லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை நாங்கள்தான் அறிவித்தோம். ஆனால் புதிதாகக் கண்டுபிடித்தது போல், மற்றவர்கள் ரூ.1,000, ரூ.1,500 என்று ஏலம் விடுகிறார்கள். மநீம ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் குறைக்கப்படும். மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைக்கப்படும். நான் கணினி கொடுப்பேன் என்று சொன்னது இலவசம் அல்ல, முதலீடு. அதனால் அரசுடன் நீங்கள் நேரடியாக உரையாடலாம், நான்தான் முதல்வர் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் இடைத்தரகர்கள் இல்லாமல் உங்கள் திட்டங்கள் எல்லாம் உங்களை வந்து சேரும். தமிழகத்தைச் சீரமைத்தே ஆக வேண்டும்” எனப் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share