முத்தமிழறிஞரின் உரைவீச்சு !

Published On:

| By admin

ஸ்ரீராம் சர்மா

முத்தமிழறிஞரின் உரைவீச்சு !

1959 ஆண்டில் ஓவியப்பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் தூரிகையால் திருவள்ளுவர் திருவுருவம் நிறைவு பெற்றபின் முதன்முதலில் அறிஞர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அப்போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ஓவியப்பெருந்தகை கே.ஆர். வேணுகோபால் சர்மா அவர்களின் சென்னை இல்லத்துக்கு வருகை தந்து திருவள்ளுவார் திருவுருவத்தை நேரில் கண்டு வாழ்த்திப் பேசிய வரலாற்றுப் பேருரையின் ஒரு பகுதி ! கலைஞரின் பதிவு செய்யப்பட்ட முதல் குரலும் இதுவே !
*******
**அன்புள்ள நண்பர்களே,**

இன்று காலையில் என்னை வந்து அழைத்த நண்பர்கள், திரு.வேணுகோபாலர் அவர்களுடைய இல்லத்திற்குச் செல்லலாம் என்றுதான் அழைத்தார்கள். ஆனால், அவர்கள் என்னை அழைத்து வந்த இல்லம், வேணுகோபாலர் அவர்களுடைய இல்லம் அல்ல; வள்ளுவருடைய இல்லம். நான் வள்ளுவருடைய இல்லத்திற்கு வந்ததாகவே உணர்கிறேன்.
மீண்டும் சந்திக்க இயலுமா என்று கருதி, நாளெல்லாம் ஏங்கி, ஏங்கி, நாம் நம்முடைய கண்களை மூடுவதற்கு முன்பு ஒருமுறை வள்ளுவரைக் கண்டுவிட்டு, கண்களை மூடமாட்டோமா என்கின்ற தமிழக பெருமக்களுடைய ஏக்கத்தையெல்லாம் துடைத்திடும் வகையில், நம்முடைய அருமை நண்பரும், ஓவியப் பெருந்தகையுமாகிய திரு. வேணுகோபாலர் அவர்கள், திருவள்ளுவர் பெருமானுடைய ஓவியத்தை, தமிழகத்திற்கு இல்லை உலகத்திற்குத் தந்திருக்கின்றார்கள்.
அத்தகைய ஒரு பெருமுயற்சியை, பாராட்டுகின்ற பட்டியலிலே நானும் ஒருவன் என்று எண்ணி, இரும்பூய்துகின்றேன்; பெருமை கொள்கின்றேன், ஏன் இறுமாப்புக் கொள்கின்றேன் என்றுகூட சொல்லுவேன்.
வள்ளுவருடைய உருவம் எத்தகையது என்கிற குழப்பம் தமிழகத்தில் பல நாட்களாக இருந்து வருகிறது; சொல்லப்போனால், பல்லாண்டுகாலமாக இருந்து வருகின்ற பெரும் போராட்டமாகவும் இருந்து வருகின்றது.
தமிழகத்தில், புலவர்களுடைய உருவம் மாத்திரம் அல்ல, தமிழகத்தினுடைய வரலாறு, தமிழகத்துப் பெருமக்களுடைய சரித்திரம், தமிழகத்து முடிவேந்தர்களுடைய வரலாறு இவர்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ள வரலாறுதான், சரித்திரம்தான், ஓவியம்தான் என்பதை நான் அறியாதவன் அல்ல.
சேரன் செங்குட்டுவன் காலம் எது? பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் வாழ்ந்த வேறு நாட்டு மன்னர்கள் யார்? என்கின்ற பல்வேறு குழப்பங்கள் நாட்டில் உண்டு. அத்தகைய சரித்திரங்கள் குழப்பமிக்கவையாக இந்த நாட்டிலே இருந்து வருகின்றன.
இந்த சரித்திரங்களில் உள்ள குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு, வரலாற்றில் உள்ள சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு, ஒரு நிர்ணயமான வரலாறு – அதேபோல, ஒரு நிர்ணயமான உருவம் புலவர்களுக்கும், அதுபோலவே, மன்னர்களுக்கும் தரப்படவேண்டும் என்கின்ற கருத்துடையவர்களில் நானும் ஒருவன்.
அப்படித் தரப்படுகின்ற உருவம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளக்கூடிய, நல்ல உருவமாக, நல்ல வரலாறாக அமையவேண்டும் என்கிற கருத்தை நான் பலமுறை, பல மேடைகளில் எடுத்துச் சொல்லியிருக்கின்றேன். அதேபோல, பல ஏடுகளிலும் எடுத்து எழுதியிருக்கின்றேன்.
அந்த நிலையில்தான், இன்றைய தினம் நான் மிகமிக மகிழ்ச்சியடைக் கூடிய வகையில், திருவள்ளுவர் பெருமகனின் உருவத்தை நம்முடைய ஓவிய நண்பர் வேணுகோபாலர் அவர்கள் தீட்டியிருப்பது குறித்து பெருமகிழ்வு அடைகின்றேன்.
வள்ளுவருடைய திருக்குறள்தான் – அவருடைய ஓவியம் – அவர் யாத்துத் தந்த 1330 அறங்குறட்பாக்கள்தான் வள்ளுவருடைய உருவத்தை நமக்குக் காட்டக்கூடியது என்ற எண்ணத்தைத்தான் இதுவரை நாம் கொண்டிருந்தோம். இவர்தான் வள்ளுவர் என்று அகிலத்திற்கு நாம் அறிவிக்கக்கூடிய வகையிலே அழகான ஒரு ஓவியத்தை வேணுகோபாலர் நமக்குத் தந்திருக்கின்றார்கள்.


நான் வள்ளுவருடைய உருவத்தைக் காணுகின்றோம். எதிரே அமர்ந்திருக்கின்ற அந்த வள்ளுவர் பெருமானுடைய ஓவியத்தை நான் காணுகின்றேன். காணுகின்ற நேரத்தில், அவருடைய கண்கள் வெளிவிடுகின்ற அந்த ஒளியை என்னால் காண முடிகிறது; சுவைக்க முடிகிறது.
**அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்**
**சிறுகை அளாவிய கூழ்**
என்கின்ற குழந்தைக்காக அவர் பாடிய, குழந்தைக்காக அவர் எழுதிய அந்த அருமையான குறளை நான் எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில், எதிரே தவழ்ந்து வருகின்ற குழந்தையை வள்ளுவர் பார்த்து, ரசித்து அந்தப் பாடலை எழுதுவதுபோல, அந்தக் கண்ணொளி அமைந்திருக்கிறது என்பதை என்னால் காண முடிகிறது.
**கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்**
**மெய்வேல் பறியா நகும்**
என்ற அந்த வீர உரைகளை சிந்திய இதழ்கள்தான் வள்ளுவருடைய இதழ்கள் – அதை ஓவியர் வேணுகோபாலர் அவர்கள் அழகாக சித்தரித்திருக்கின்றார்.
வள்ளுவருடைய கையிலே பிடித்திருக்கின்ற அந்த எழுத்தாணியும்,
இன்னொரு கரத்திலே இருக்கின்ற சுவடியைக் காணுகின்ற நேரத்தில்,
சுவடியை அமைத்திருக்கின்ற கரத்திலே, புடைத்திருக்கின்ற நரம்புகளையும், அதேபோல, எழுத்தாணியைப் பிடித்திருக்கின்ற கரத்திலே புடைத்திருக்கின்ற நரம்புகளையும் காணுகின்ற நேரத்தில்,
ஓவியர் எவ்வளவு சிந்தித்துச் சிந்தித்து, எந்த அளவிற்கு நெஞ்சத்திலே வள்ளுவருக்காக இடம் அமைத்து, அந்த ஓவியத்தை எழுதியிருக்கின்றார் என்பதை நாம் எண்ணும்பொழுதும், எண்ணுந்தோறும் அவரைப் பாராட்டுவதற்கு கடமைப்பட்டு இருக்கின்றேன்.
இப்படிப்பட்ட ஒரு நல்ல காரியத்தை தமிழகத்திற்குச் செய்த ஓவியர் வேணுகோபாலர் அவர்களை, அறிஞர் பலரோடும் சேர்ந்து நான் பாராட்டுவதற்குக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
**இனிய உளவாக இன்னாத கூறல்**
**கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று**
என்கின்ற வள்ளுவருடைய குறளையே, இந்த வள்ளுவருடைய ஓவியத்தைப்பற்றி யாராவது, ஏதாவது கூறுவார்களேயானால், அவர்களுக்கு நான் பதில் சொல்வதற்குக் கடமைப்பட்டு இருக்கின்றேன்.
**பல்லார் முனியப் பயனில சொல்லுவான்**
**எல்லாரும் எள்ளப் படும்**
என்கின்ற குறளைத்தான் அவர்களுக்கு நான் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.
இந்த வள்ளுவருடைய உருவம் தமிழ்நாட்டாரால், அகில உலகத்தாரால் பாராட்டப்படவேண்டிய, போற்றி ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஓர் உருவம் என்பதை நான் எடுத்துச் சொல்ல விரும்புகின்றேன்.
இனி உலகத்தில், வள்ளுவருடைய பெயரோடு, இன்னும் இரண்டு பெயர்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கும் – திருவள்ளுவர் – திருக்குறள் – ஓவியர் வேணுகோபாலர் என்ற மூன்று பெயர்களும் தமிழகத்து மக்களால் மறக்க முடியாத பெயர்களாகும்.
வாழ்க வள்ளுவர்!
வாழ்க வேணுகோபாலர்!

வணக்கம்!!

**நன்றி முரசொலி **

**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா -** எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment