uபெரியாருக்கும் அண்ணாவுக்கும் நடுவே கலைஞர்

politics

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வரும் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்” என்றும், “சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞருக்குச் சிலை எழுப்பப்படும்” என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.
“தமிழ்நாட்டை ஐந்துமுறை ஆண்டவர் கலைஞர். அவர் ஆட்சியிலிருந்த காலத்தில் உருவாக்கியதுதான் இன்று நம் கண்ணுக்கு முன்னால் பார்க்கக் கூடிய நவீன தமிழகம்.
நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத தலைவர் கலைஞருடைய மறைவுக்குத்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக ஒத்திவைக்கப்பட்டன. அரசு என்பது பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனாலும் அவரிடம்தான் இருந்தது.
அரசும் அரசியலும் அவரை இயக்கின. அரசையும் அரசியலையும் அவரே இயக்கினார். இத்தகைய அரசியலின் மாபெரும் தலைவருக்கு இந்த அரசு தனது வரலாற்றுக் கடமையைச் செய்ய நினைக்கிறது.
திருவாரூரில் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாகக் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். வரும் ஜூன் 3ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும்” என்று அறிவித்தார்.
கலைஞர் சிலை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் எந்த இடத்தில் நிறுவப்படும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையேயும் பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அண்ணா சாலையை ஒட்டிய முக்கிய பகுதியில்தான் கலைஞர் சிலை அமைக்கப்படும் என்று தெரிகிறது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் ஒரு முனையான சிம்சன் சிக்னல் பகுதியில் தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அதே அண்ணா சாலையில் அரசினர் தோட்டத்தின் இன்னொரு முனையில் பேரறிஞர் அண்ணா சிலை அமைக்கப்பட்டுள்ளது..
பெரியார் சிலைக்கும் அண்ணா சிலைக்கும் இடைப்பட்ட பகுதியில் தற்போது கலைஞர் சிலை அமைக்கப்படுவதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. அந்தப் பகுதியில் பச்சை வண்ண பெரும் கூண்டு கட்டி கலைஞர் சிலை அமைப்பதற்கான இடத்தை தயார்படுத்தும் பணிகள் பொதுப்பணித் துறை மூலமாக நடந்து வருகின்றன.
திராவிட இயக்க அரசியலில் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் நடுநாயகமாக நின்று தனக்கென தனி இடத்தை பிடித்தவர் கலைஞர். அதை உருவகப்படுத்தும் விதத்திலேயே தற்போது பெரியார் சிலைக்கும் அண்ணா சிலைக்கும் இடையே கலைஞர் சிலை நிறுவப்படுவது பொருத்தமானது என்கிறார்கள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வட்டாரத்தில்.
**-வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *