முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் தனிச்செயலர் சண்முகநாதனின் இறுதிநிகழ்வுகள் இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெறுகிறது. சென்னை, மயிலாப்பூர் இடுகாட்டில் அவரின் இறுதிக் கிரியைகள் செய்யப்படும் என குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தன் 25 வயதில் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராக இணைந்துகொண்ட சண்முகநாதன், அரை நூற்றாண்டுகளாக அந்தப் பணியைச் செய்திருப்பதையே, அனைத்து தரப்பினரும் குறிப்பிட்டு நினைவுகூர்கிறார்கள். அந்த அளவுக்கு கலைஞரின் செயலாளராக சண்முகநாதன் செய்த பணியின் தன்மை இருந்தது.
முதலமைச்சராக இருந்தவரின் ஓய்வு நேரம், தூக்க நேரம் என்பது கலைஞரைப் பொறுத்தவரை குறைவானதுதான். அவருடைய நிழலாகப் பின்தொடர வேண்டிய ஒருவரும் அப்படியே இருந்தாக வேண்டும் என்பதை நினைத்துப்பார்த்தால், அதற்கு தனி மனப்பாங்கும் சகிப்புத்தன்மையும் வேண்டும் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
சண்முகநாதன் கலைஞரின் கோபத்தால் சில முறை வீட்டுக்குப் போய்விட்டார் என்பதை பலரும் ஏன் அவருமேகூட சில பேட்டிகளில் கூறியிருக்கிறார். ஆனால், எத்தனையோ ஆயிரம் பேர் கலைஞரைச் சந்திக்க வந்துபோகும்போது, எல்லாருக்கும் எதிர்பார்த்த பதில் கிடைக்காமல் போகலாம்; தாமதமாகக் கிடைக்கலாம்; கொஞ்சம் வறுபட்டும் செல்லக்கூடிய வாய்ப்பும் உண்டு. இப்படியான சமயங்களில் அந்தத் தலைவருக்கும் தொண்டருக்கும் அல்லது நிர்வாகிக்கும் இடையே சமாதானம் செய்பவராக, சண்முகநாதன் செய்த ஆற்றுப்படுத்தலை சம்பந்தப்பட்டவர்களும் அவரும் மட்டுமே அறிவார்கள். அதைச் சொல்வதற்கு சண்முகநாதன் இப்போது இல்லை; சம்பந்தப்பட்டவர்கள் சொன்னால்தான் உண்டு!
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சண்முகநாதனைப் பொறுத்தவரை, கலைஞரின் கோபாலபுரம் இல்லத்தில் அவருக்கென உள்ள அறைதான் அலுவலகம். அதுவே அவரின் நிரந்தர அலுவலகமும்கூட. அன்றாடப் பணிகளில் ஈடுபடமுடியாதநிலைக்குச் செல்லும்வரை காலையில் அலுவலகம் வந்து, கலைஞரின் ஓய்வுநேரத்துக்குள் வீட்டுக்கு ஓடி உணவு உண்டுவிட்டு, மீண்டும் அலுவலகம் வந்துவிடுவார். கலைஞரின் செயல்பாடுகள் முடங்கிய நிலை ஏற்பட்ட பின்னரே, பிற்பகலில் சற்று கூடுதல் நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வது என்பது சண்முகநாதனுக்கு வாய்த்தது. ஆனாலும் மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் அவர் தன் அலுவலகம் வந்து அன்றைய பணிகளைச் செய்து முடித்துவிட்டுத்தான் வீடுதிரும்புவார்.
இப்படி சக்கரமாய்ச் சுழன்றவருக்கு கலைஞர் ஒருவர் இருக்கிறார் என்கிறவரை மனதுக்கு சிக்கல் இல்லை. அரை நூற்றாண்டு காலம் கலைஞர் எனும் சக்கரத்தின் அச்சாணியைப் போல சுற்றிவந்த சண்முகநாதனுக்கு அவருடைய இல்லாமை மனதின் ஓரத்தில் வெறுமையை உண்டாக்கத் தொடங்கியது. எவ்வளவுதான் வைரம் பாய்ந்த உருக்கு திடம் படைத்தவர்களும் உடையும் தருணம் என ஒன்று அல்லவா? சண்முகநாதனுக்கு அது கலைஞரின் இல்லாமையிலிருந்து தொடங்கியது எனலாம். வரிசையாக, அவரின் உடல்நிலையிலும் அந்த வெறுமை தாக்கத்தை ஏற்படுத்தியது.
கலைஞர் இறந்துபோன பிறகு, அவருக்கும் தனக்கும் வேண்டப்பட்டவர்களை தொடர்ந்து சந்தித்தபடியே இருந்திருக்கிறார், சண்முகநாதன். அவர்களில் சிலரிடம், அவர், “ சீக்கிரமா போயிடணுங்க..” என அடிக்கடி சொல்லியிருக்கிறார். அதிசய எந்திரம்போல ஓடிக்கொண்டிருந்தவருக்கு மீண்டும் அதே போல ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்; சிறிதோ பெரிதோ ஒரு வேலையைச் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்பது அவரின் தாகமாக இருந்துள்ளது என்கிறார்கள், இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவருடைய உரையாடியவர்கள்.
இதற்கு மருந்தோ சிகிச்சையோ தீர்வாக இருக்குமா என்றால் திட்டவட்டமான பதில் கிடைப்பது எளிதாக இல்லை.
சரி, பாதிக்கப்பட்டுவிட்டார்; அப்போலோ போன்ற உயர்தர சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளில் சேர்ந்து நலம் மீள்வதற்கு வழி இல்லையா என்பதும் கட்சியினரிடம் கேள்வியாக இருக்கிறது. அரசியலில் முதலமைச்சர் ஒருவரிடம் உதவியாளராக, செயலாளராக இருந்த ஒருவர் என்கிற அளவுக்கு, சண்முகநாதன் தன் பலத்தை உருவாக்கிக்கொள்ளவோ பயன்படுத்திக்கொள்ளவோ இல்லை என்பதே நிதர்சனம்.
**- முருகு**
�,”