விழாக்காலங்களில் சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் தங்கள் கட்டணங்களை மிக அதிக அளவுக்கு ஏற்றுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சித்திரை திருநாள் – தமிழ்ப் புத்தாண்டு, புனித வெள்ளி, சனி – ஞாயிறு விடுமுறைகள் என நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து நேற்று கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப திரண்டனர்.
இதுதான் வசூல் காலம் என்ற வகையில் ஆம்னி பஸ்கள் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட நகரங்களுக்கான பேருந்து கட்டணத்தை தாறுமாறாக ஏற்றினார்கள். மதுரைக்கு குறைந்தபட்ச கட்டணமே 1,500 ரூபாய், அதிகபட்ச கட்டணம் 2,000 ரூபாய் என இருந்ததை கண்டு பயணிகள் திடுக்கிட்டனர்.
ஆம்னி பஸ் என்பதே பயணிகள் போக்குவரத்துக்கு ஆனது அல்ல, ஒரு பயணக் குழுவினரை ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலை பேசி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியதுதான் ஆம்னி பேருந்துகள். ஆனால் அரசு துறையினரின் அலட்சியத்தால் கடந்த 20 ஆண்டுகளில், அரசு போக்குவரத்துக் கழகங்களை போலவே ஆம்னி போக்குவரத்துக் கழகம் என அமைக்கும் அளவுக்கு அவர்கள் தனி பேருந்து நிலையமும் பெற்று தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் உச்சகட்டமாகத்தான் 2,000 ரூபாய் டிக்கெட் வசூலிக்கப்பட்டது. இந்தத் தகவல்கள், புகார்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்குச் சென்றதும், வழக்கம் போல நேற்று மாலை போக்குவரத்துக் கழக இணை ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு நடத்தினார்கள்.
அதற்குப் பிறகும் ஆம்னி கட்டணக் கொள்ளை தொடர்ந்த நிலையில் நேற்று இரவு திடீரென போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பஸ் நிலையத்துக்குள் நுழைந்தார். ஒவ்வொரு ஆம்னி பஸ் ஆக ஏறி இறங்கி உள்ளே சென்று பயணிகளைப் பார்த்து எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கினீர்கள், எங்கே செல்கிறீர்கள் என்றெல்லாம் விசாரித்து அதிக கட்டணத்தை உடனடியாக பயணிகளிடம் திருப்பிக் கொடுக்கச் செய்தார் அமைச்சர் சிவசங்கர்.
“அமைச்சரின் செயல்பாடு நன்றாக இருக்கிறது என்றாலும், ஒரு கையெழுத்து போட்டு தன் அதிகாரத்தை நிரூபிக்க வேண்டிய அமைச்சர், இப்படி ஒவ்வொரு பேருந்தாக ஏறி இறங்கும் சூழல் ஏற்பட்டது அரசின் அலட்சியத்தால்தான். ஆம்னி பேருந்துகளை முறைப்படுத்தவில்லை என்றால் அடுத்தடுத்த தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு இதைவிட அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படும்” என்று எச்சரிக்கிறார்கள் பயணம் செய்த பொதுமக்கள்.
**வேந்தன்**
Rஆம்னி பஸ்களில் அமைச்சர் ஆய்வு!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel