சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1997ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சத்யபிரதா சாகு, சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர். இந்நிலையில் 2018ஆம் ஆண்டு அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்காணி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சத்யபிரதா சாகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டப்பேரவை தேர்தல் ஆகியவை இவரது தலைமையில் நடைபெற்றது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த சூழலில் அவருக்குச் சிறந்த தேர்தல் அதிகாரிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் (இசிஐ) சந்தோஷ் அஜ்மிரா, சத்ய பிரதா சாகுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
2021 ஆம் ஆண்டில் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் நிர்வாகத்தின் பல்வேறு துறைகளில் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காகச் சிறந்த தேர்தல் அதிகாரி என்ற பிரிவின் கீழ் தேசிய விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதைத் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜனவரி 25ஆம் தேதி டெல்லி அசோகா ஹோட்டலில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சத்ய பிரதா சாகுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,