கழக அரசியலும் கார்ப்பரேட் அரசியலும்! மினி தொடர் 18
பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பொலிடிக்கல் ஆக்ஷன் கமிட்டி என்ற நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பேர்கள் பணியில் இருக்கிறார்கள். அரசியல் ஆர்வலர்கள், சர்வே எடுப்பதில் வல்லமையும் அனுபவமும் பெற்றவர்கள், எந்தப் பகுதி மக்களானாலும் அவர்களிடம் உரையாடி உரையாடி மக்களின் மனதைத் திறந்து பார்க்கும் மனவளைக் கலை நிபுணர்கள் இப்படி பலதரப்பட்ட திறன் பெற்றவர்கள் பிரசாந்த் கிஷோரின் பாசறையில் இயங்குகிறார்கள்.
இது மட்டுமல்ல ஊடக அறிவியலாளர்கள், தரவுகளைக் கொண்டு சமூகத்தின் மெய் நிகர் தோற்றத்தை அனுமானிக்கும் ஆய்வாளர்கள், சமூக தள பகுப்பாய்வாளர்கள் என்று பிகேவின் குழுவில் பல்வேறு பணிகளும், அதற்கேற்ற பணியாளர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருமே பலகட்ட சோதனைகள், பல கட்ட வடிகட்டல்கள், பல கட்ட மெருகூட்டல்களுக்குப் பிறகுதான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஐபேக் டீமில் வேலை செய்வது பிடித்திருக்கலாம், முழு நேர அரசியலில் இல்லாமல் இதுபோல திட்டமிடல், உத்தி வகுத்தல்களில் ஈடுபாடு உடையவர்கள் பிகேவைத் தேடி வந்திருக்கலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக தனிப்பட்ட அரசியல் பார்வை ஒன்று இருக்கும்.
இங்கேதான் 517 ஆவது திருக்குறளை அப்ளை செய்கிறார் பிரசாந்த் கிஷோர்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
இந்தச் செயலை இவரை வைத்து முடித்தால் அவர் இன்ன முறையில் இதை சிறப்பாக செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து தெளிந்து அவரிடம் அந்த வேலையைக் கொடுக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். அதன்படியேதான் பிகே பணிகளை வகைப்படுத்தி பிரித்துக் கொடுக்கிறார்.
பிரசாந்த் கிஷோரிடம் தொழில் நேர்த்தி (ப்ரஃபஷனலிசம்) மிக்க பணியாளர்கள் இருந்தாலும் அவர்களுக்கென அடிமனதில் தனித்தனியாக ஒரு அரசியல் கட்சி மீதான அபிமானம் இருந்தே தீரும். அவரவர் குடும்ப சூழல், ஊர் சூழல், வளர்ந்த சூழல், அவர்களைக் கவர்ந்த அரசியல் தலைவர்கள் என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கும்.
இந்த நிலையில் இந்த அபிமானம் அவர்கள் செய்யப் போகிற வேலையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் பிரசாந்த் கிஷோர். இதற்காக ஒவ்வொரு முறை தேர்தல் பணிகளுக்குத் தயாராகும்போது அதுகுறித்து தனது பணியாளர்களிடையே ஒரு தேர்தல் நடத்துவது பிகேவின் வழக்கம்.
பாஜகவுக்காக வேலை செய்யலாமா, காங்கிரஸுக்காக வேலை செய்யலாமா, இன்ன மாநிலக் கட்சிகள் நம்மை அணுகியிருக்கின்றன அவர்களுக்காக வேலை செய்யலாமா என்பது பற்றி தனது பணியாளர்களிடம் தேர்தல் நடத்துவது ஐபேக்கின் ஒரு உத்தி. வாக்குச் சாவடி அமைக்கப்பட்டு ஒரு வாக்குச் சாவடிக்கு 276 வாக்காளர்கள் (ஐபேக் பணியாளர்கள்) வீதம் 2018 ஆம் ஆண்டு வாக்களித்தார்கள். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் அன்றே அறிவிக்கப்பட்டன.
ஆனால் ஐபேக் டீமிலிருந்து வெளியே வந்த சிலர், “இந்தத் தேர்தல் ஒரு கண் துடைப்பு என்றும் யாருடன் வேலை செய்வது என்று பிகே முன்பே முடிவு செய்துவிடுவார். அது தொடர்பான தகவல்களும், ஆர்வமும், கருத்தொற்றுமையும் பணியாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவிடும். அதன் பின் இப்படி ஒரு மாதிரி தேர்தலை நடத்திக் கொள்வார்” என்று தெரிவித்தனர்.
அதுபோல திமுகவுடன் ஒப்பந்தமிடும் முன் ஐபேக் பணியாளர்களிடம் தேர்தல் நடத்தப்பட்டதா என்று தகவல் இல்லை. ஆனால், சில நாட்களாக கிடைக்கும் தகவல்களின்படி தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பணியாற்றுவதற்கான திறம் மிகுந்த ஊழியர்களை ஏறக்குறைய பிரசாந்த் கிஷோர் பொறுக்கி எடுத்துவிட்டார் என்கிறார்கள்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கள நிலவர அறிக்கையை திமுக தலைமையிடம் பிகே தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் வரும் மார்ச் மாதம் முதல் கட்ட அறிக்கையை அவர் திமுக தலைமையிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றோடு கைகோர்த்திருக்கும் பிகே, ஆந்திராவுக்கு அருகே இருக்கக் கூடிய மாநிலமாக இருந்தாலும் ஆந்திர அரசியல் களத்தை விட வித்தியாசமான களத்தை தமிழகத்தில் காணக் காத்திருக்கிறார்
(கார்ப்பரேட் அரசியல் பயிலக் காத்திருங்கள்)
[நேருவே சாட்சி- மாசெக்களுக்கு ஸ்டாலின் மெசேஜ்!](https://minnambalam.com/politics/2019/12/22/44/dmk-prasanth-kishore-agreement-witness-signatue-k.n.nehru)
�,