Cரூ.4 லட்சம் போதாது : ஓபிஎஸ்

Published On:

| By Balaji

கனமழை பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வாரத்தில் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அதீத கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டது. தற்போது கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதீத கனமழையால் குமரியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 11ஆம் தேதி அன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு அருகே கரையைக் கடந்த நிலையில் ,சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து அதன் விளைவாக 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது சார்பிலும், அதிமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நிவர் புயல் உருவாகி கனமழை ஏற்பட்ட சமயத்தில், உயிர் சேதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த போதும் , எதிர்பாராத விதமாக புயல் மற்றும் கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 4 லட்ச ரூபாயும் , முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ஆறு லட்ச ரூபாயும், ஆக மொத்தம் 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

அண்மையில் பெய்த கனமழை காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய காற்றழுத்த தாழ்வுநிலையை விட புயலின் தாக்கம் பன்மடங்கு அதிகம். இருப்பினும் உயிரிழப்பு குறைவு. ஆனால், தற்போது தாக்கம் குறைவு, உயிரிழப்பு அதிகம். இதற்கு காரணம் அரசியல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஏற்பட்ட தொய்வுதான் என்று தமிழக மக்கள் கருதுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 நாட்களுக்குள் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, அதிமுக ஆட்சியில் 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி என்பதை ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.

அதனால், அண்மையில் பெய்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியை, மாநில அரசு குறைந்தபட்சம் 10 லட்சம் (அ) அதற்குமேல் உயர்த்தி வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share