�அன்று கேதார்நாத்- இன்று காசி: பிரதமரின் நிகழ்ச்சி கோயில்களில் மீண்டும் ஒளிபரப்பு!

Published On:

| By Balaji

பிரதமர் மோடி நவம்பர் 5 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து உரையாற்றினார். அந்த உரையை தமிழக பாஜகவினர் தமிழகத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் எல்.ஐ.டி. திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்து அதை பார்த்தனர். ஸ்ரீரங்கம் கோயிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் 15 கோயில்களில் பாஜகவினர் இதை கண்டனர்.

இதை எதிர்த்து ஸ்ரீரங்கம் வைணவ செயற்பாட்டாளர் ரங்கராஜன் நரசிம்மன் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். ஆனால் அண்ணாமலையோ, இந்த நிகழ்ச்சி தமிழக இந்து சமய அறநிலையத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டது. நான் அதில் சாதாரண மனிதனாக கலந்துகொண்டேன். இதுபோன்ற நிகழ்ச்சில் மேலும் கோயில்களில் நடக்கும்” என்று பேட்டியளித்தார். இதுபற்றி அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

இந்த நிலையில்தான் அண்ணாமலை சொன்னவாறே… சரியாக ஒரு மாதம் கழிந்த நிலையில் இன்று (டிசம்பர் 13) பிரதமர் மோடி தனது மக்களவை தொகுதியான வாரணாசிக்கு உட்பட்ட காசி விஸ்வநாதர் தாம் கோயில் புனரமைக்கப்பட்ட பகுதிகளை திறந்து வைத்தார். இதை ஒட்டி முன்னதாக கங்கை நதியில் பூஜை செய்த மோடி, இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் பூஜை செய்தார்.

இந்த நிகழ்ச்சியை நவம்பர் 5 ஆம் தேதி போலவே இன்று தமிழக கோயில்களில் நேரலையாக ஒளிபரப்பி அதை பாஜகவினர் கூடி கண்டுள்ளனர்.

முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், இந்த நிகழ்ச்சியை நெல்லை மாவட்டம் கழுகுமலை கழுகாசல மூர்த்தி முருகன் கோயிலில் பொதுமக்கள் மற்றும் பாஜகவினருடன் நேரலையில் கண்டிருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக தளப்பக்கத்தில், “காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சுவாமியை தரிசித்துவிட்டு, பாரத பிரதமர் அவர்கள் காசியில் புனரமைக்கப்பட்ட விஸ்வநாதர் ஆலயத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததை பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், சாது, சந்நியாசி சுவாமிகளுடன் அமர்ந்து பார்த்தோம்”என்று

பதிவிட்டிருக்கிறார்.

பாஜகவின் முன்னாள் தேசிய இளைஞரணிச் செயலாளரான ஏ.பி. முருகானந்தம், “ உத்தர பிரதேச மாநிலம் காசியில், பல கோடி மக்கள் பயன்பெறும் வகையில் புனரமைப்பு செய்யப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். தமிழகத்திலுள்ள பல்வேறு இடங்களில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் அவர்கள் பங்கேற்ற காசி ஆலயத்தின் நிகழ்ச்சியினை, பொள்ளாச்சி குரும்பபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான அம்மணீஸ்வரர் சிவன் ஆலயத்திலும், சின்னம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கல்யாண விநாயகர் ஆலயத்திலும் பொதுமக்களோடு பங்கேற்றோம்”என்று தனது சமூக தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து [இறையன்புவுக்கு நிர்மலா போட்ட உத்தரவு- கோயில்களில் மோடி நிகழ்ச்சி பின்னணி](https://minnambalam.com/politics/2021/11/20/16/tamilnadu-temples-modi-speech-live-nirmala-sitharaman-iraiyanbu-mkstalin-sekarbabu-annamalai) என்ற தலைப்பில் செய்தியாக மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம். இந்த காசி நிகழ்ச்சியின் ஒளிபரப்பிலும் ஒன்றிய அரசின் உத்தரவு பங்கு வகிக்கிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share