nஎதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்த ஜார்க்கண்ட்

Published On:

| By Balaji

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11 ஆவது முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று (டிசம்பர் 29) பதவியேற்றார். நடந்து முடிந்த ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று பாஜகவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனையடுத்து, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியிலுள்ள மோரகபடி மைதானத்தில் இன்று பிற்பகல் நடந்த நிகழ்ச்சியில், ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். ஹேமந்த் சோரனுடன் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஆலாம்கர் அலாம், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ்வர் ஓரோன் மற்றும் ஆர்ஜேடி எம்எல்ஏ சத்யானந்த் போக்தா ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ஜனவரி 15ஆம் தேதிக்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேந்தர் சிங் பாகெல், ஹேமந்த் சோரனின் தந்தையும் முன்னாள் முதல்வருமான சிபு சோரன், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா, திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவிற்கு 14 கட்சிகளைச் சேர்ந்த 30 தலைவர்கள் அழைக்கப்பட்டனர். இவர்களில் பிரதமர் மோடியும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் வர இயலாமல் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தனர்.

பதவியேற்புக்குப் பிறகு ஹேமந்த் சோரனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், அவருக்கு கலைஞர் பற்றிய புத்தகத்தையும் பரிசளித்தார். விழாவில் கலந்துகொண்டது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொண்டேன். குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்ப்பதற்கும் வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போராடி சமூக நீதியைக் காப்பதற்கும் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அவசியம். ஜார்க்கண்டின் புதிய அரசாங்கம் வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விழாவில் ஹேமந்த் சோரனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். மேடையில் ஹேமந்தின் தந்தை ஷிபு சோரன் மற்றும் தாய் ரூபி சோரன், மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

துணை முதல்வர், சபாநாயகர் மற்றும் அமைச்சர் பதவிகள் தொடர்பாக சனிக்கிழமை பிற்பகல் வரை ஜே.எம்.எம் மற்றும் காங்கிரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, அமைச்சரவையின் வடிவம் முடிவு செய்யப்படவில்லை. சபாநாயகருடன் துணை முதலமைச்சர் பதவியையும் காங்கிரஸ் கோருகிறது. அதில் ஜே.எம்.எம். கட்சிக்கு உடன்பாடில்லை. எனவே ஹேமந்த் அமைச்சரவையில் மீதமுள்ள அமைச்சர்களின் பெயர்கள் குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. நாளை டிசம்பர் 30 அன்று டெல்லியில் கூட்டப்படும் கூட்டத்தில், அமைச்சர்களின் பெயர்களை கூட்டணித் தலைவர்களிடையே பேசி முடிவு செய்கிறார்கள். இதன் பின்னர், பிற அமைச்சர்கள் ஜனவரி 15 க்குப் பிறகு பதவியேற்பார்கள். .

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share