பாஜக ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றது. கடந்த நவம்பர் 20ஆம் தேதி தொடங்கிய தேர்தல் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த தேர்தலில் 66.53 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் 65.17 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
பாஜக தனியாகவும், காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜெஎம்எம்), லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. கடந்த தேர்தலில் ஜார்க்கண்ட் அனைத்து மாணவர்கள் சங்கத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்றும், இதுதவிர இரு கட்சிகளும் பெரும்பான்மையைப் பிடிக்காது என்றும் கருத்துக் கணிப்புகள் வெளியாகின. இந்நிலையில் இன்று, வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதில் முதலில் பாஜக முன்னிலை வகித்த நிலையில் அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகித்தது. அதன் பின் மீண்டும் பாஜக முன்னிலை வகித்தது.
காங்கிரஸ் கூட்டணியும், பாஜகவும் மாறி மாறி முன்னிலை வகித்த நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 81 இடங்களில் பாஜக – 28, காங்கிரஸ் – 13, ஜெஎம்எம் – 23, ஆர்ஜேடி – 5, ஜெவிஎம் (பி) – 4 ஏஜெஎஸ்யு – 4, சுயேச்சை – 2 சிபிஐ (எம்எல்) – 1 ஆகிய இடங்களில் முன்னணியில் உள்ளன.
ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை 41 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி 40க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. கட்சித் தலைமை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, பிகாரின் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடியின் முக்கியத் தலைவருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ், ”ஜெஎம்எம் தலைமையிலான மெகா கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவுள்ளது. ஜெஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவி வகிப்பார்” என கூறியுள்ளார்.
கிழக்கு ஜம்ஜெஷ்பூர் தொகுதியில் போட்டியிட்ட தற்போதைய பாஜக முதல்வர் ரகுபர் தாஸ் பின்னடைவை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகுபர் தாஸ் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இது இறுதியல்ல. இதுகுறித்து மாலையில் கருத்து தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.�,