�டிஜிட்டல் திண்ணை: ஜெயக்குமார் மீது குண்டாஸ்: ஸ்டாலினை தடுத்த அழுத்தங்கள்!

Published On:

| By admin

வைஃபை ஆன் செய்யவும் வாட்ஸ் அப்பில் அப்டேட் வந்தது.
“சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு கொலை முயற்சி வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. திருச்சியில் தங்கி கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரங்கள் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில் ஜெயக்குமாருக்கு கீழமை நீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது. இப்போது கொலை முயற்சி வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. மகேஷ் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் ஜெயக்குமார் மீது தொடுத்த மோசடி புகார் மீதான வழக்கில் ஜாமீன் மனு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால் ஜெயக்குமார் தற்போதைக்கு வெளியே வர வாய்ப்புள்ளது” என்றது அந்த வாட்ஸ்அப் அப்டேட்.

இதைத்தொடர்ந்து பேஸ்புக் மெசஞ்சர் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மேலான நிலையில், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட அரசு தரப்பில் ஆலோசனை நடப்பதாக மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதற்கேற்ப ஜெயக்குமார் மீது அடுத்தடுத்து வழக்குகள் தொடுக்கப்பட்டன. மத்திய குற்றப்பிரிவில் ஜெயக்குமார் மீது தொடுக்கப்பட்ட வழக்கை அடுத்து, ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான இளம்பெண் ஏமாற்றப்பட்ட விவகாரமும் வழக்காக பதிவு செய்யப்படலாம் என அரசு வழக்கறிஞர்கள் மத்தியிலேயே பேச்சு நிலவியது.

ஜெயக்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டு அவர் ஒரு வருட காலம் சிறையில் அடைக்கப்பட முயற்சிகள் நடந்தன. பின்னாட்களில் குண்டர் சட்டம் உயர் நீதிமன்றம் சென்று உடைக்கப்பட்டாலும் சில மாதங்களாவது ஜெயக்குமார் சிறையில் இருக்க வேண்டும் என்பதுதான் அவரது அரசியல் எதிரியான அமைச்சர் சேகர்பாபு போடும் கணக்கு என வட சென்னை திமுக வட்டாரங்களில் பேச்சு எழுந்தது.

இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இந்த விவகாரம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு சில விஷயங்களை கொண்டு சென்றுள்ளார். ஜெயக்குமார் மீது குண்டர் சட்டம் வேண்டாம் என்பதுதான் பன்னீர்செல்வத்தின் வேண்டுகோள். இதேபோல அதிமுக வழக்கறிஞரான மனோஜ் பாண்டியன் தனது நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருக்கும் உயர் போலீஸ் அதிகாரிகளிடமும் ஜெயக்குமார் மீது குண்டர் சட்டம் வேண்டாமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்த வரிசையில் ஜெயக்குமாரின் மகனும் முன்னாள் எம்பியுமான டாக்டர் ஜெயவர்தனும் தனது தொடர்பு எல்லைக்குள் உள்ள அரசியல் மற்றும் காவல்துறை பிரமுகர்களிடம் பேசி இருக்கிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடமும் ஜெயவர்தன் பேசியுள்ளார்.

மத்திய குற்றப்பிரிவு வழக்கில் ஜெயக்குமார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஆஜர்படுத்தப்பட்ட போது நங்கநல்லூர் மண்டல் பாஜக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பாஜக கொடிகளோடு ஆலந்தூர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை. மாநில பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் அங்கே சென்று ஜெயக்குமாரை நீதிமன்ற வளாகத்தில் சந்தித்து பாஜகவின் ஆதரவையும் தெரிவித்தார்.

மேலும் அண்ணாமலை அதிகாரிகள் மூலமாகவும் தமிழக அரசுக்கு ஜெயக்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ச்ச வேண்டாமென அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

இவ்வளவு அரசியல் அழுத்தங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்ற நிலையில் அவர் இது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிடம் பேசியுள்ளார். சேகர்பாபு அழுத்தத்தின் பேரில்தான் ஜெயக்குமார் மீது கைது நடவடிக்கை வரை சென்றார் ஸ்டாலின்.

இந்த நிலையில் வெவ்வேறு திசைகளில் இருந்து வந்த வேண்டுகோள்களை ஏற்று ஜெயக்குமார் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்ச வேண்டாம் என முதல்வர் முடிவெடுத்துள்ளார். அதன் அடிப்படையில்தான் இன்று நீதிமன்றத்தில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை போலீஸ் தரப்பு எதிர்க்கவில்லை” என்று தனது மெசேஜை முடித்து சென்ட் கொடுத்தது மெசஞ்சர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share