ஜெயக்குமாருக்காக கண்டன போராட்டம்: அதிமுக

politics

அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து… வரும் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.

திமுக தொண்டரை நிர்வாணப்படுத்தி கும்பல் வன்முறையில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கிளைச் சிறையில் வைக்கப்பட்ட வரை பிறகு புழல் சிறைக்கு மாற்றினார்கள்.

நேற்று பிப்ரவரி 24ஆம் தேதி புழல் சிறைக்கு சென்று அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி உள்ளிட்டோர் ஜெயக்குமாரை சந்தித்து விட்டு வந்தனர்.

ஜெயகுமாரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “இந்த அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவோம். ஜெயக்குமார் மீது புகார் கொடுத்த அந்த நபர் பல வழக்குகளில் தொடர்புடையவர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்று எனக்குத் தகவல் கிடைத்து”என்று கூறினார்.

இந்த சந்திப்பை அடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், “திமுகவின் கையாலாகாத் தனத்தையும் திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மக்களுக்கு தெளிவாக புரிகின்ற வகையில் செய்தியாளரை சந்தித்து விளக்கமாக தெரிவித்துக்கொண்டிருந்தவர் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார். முதல் தகவல் அறிக்கையில் சொல்லியிருக்கும் எந்த சட்டப் பிரிவுகளின் கீழும் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து இருப்பதை கண்டித்தும் பிணையில் வரமுடியாத அளவுக்கு தொடர் வழக்குகளை அவர் மீது புனைய முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்தும் பிப்ரவரி 28 ஆம் தேதி திங்கட்கிழமை காலை தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
உண்மை நிலையை உணராமல் யாரோ சொன்னதைக் கேட்டு மிகப்பெரிய குற்றப்பின்னணி கொண்ட தொடர் குற்றம் புரியக் கூடிய நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியை தன்னுடைய தொண்டர் என பெருமையோடும் அந்த தொண்டனுக்கு ஒருவர் என்றால் நானே களம் இறங்குவேன் என கர்ஜிப்பதும் ஒரு முதலமைச்சருக்கு, ஒரு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. எந்த குற்றம் புரிந்தாலும் என் தலைவன் என்னைக் காப்பாற்றுவார் என்ற எண்ணத்தை திமுகவினருக்கு அதன் தலைவரே அறிவுறுத்துவது போல உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட அன்று இரவு அவரது மகன் முன்னாள் எம்பி ஜெயவர்தனை தவிர வேறு யாரும் பெரிதாக களத்தில் இல்லை. சென்னையில் இருக்கும் அதிமுக மாவட்டச் செயலாளர்களில் ஓரிருவர் தவிர வேறு யாரும் இந்த விவகாரத்தை கையில் எடுக்கவும் இல்லை.

இதனால் ஜெயக்குமார் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தனர்.
இந்த நிலையில்தான் சிறையில் ஜெயக்குமாரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்டு திரும்பியதும் அவருக்காக மாநிலம் முழுவதும் கண்டன போராட்ட அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *