மார்ச் 31ஆம் தேதிக்குள் அனைத்து பயனாளிகளுக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்பி தரப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலின்போது ஐந்து சவரனுக்குக் குறைவான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. இதையடுத்து நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாகவும், அதை ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அரசு அறிவித்தது. அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் 48 லட்சத்து 85 ஆயிரம் பேர் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கியதில், தகுதியுள்ள 14 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தது.
இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 165 பயனாளிகளுக்கு நகைகள் மற்றும் அதற்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 19) தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நகைகள் மற்றும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.
இதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஐ.பெரியசாமி, “11 நாட்களுக்குள், அதாவது மார்ச் 31ஆம் தேதிக்குள் 14 லட்சத்து 40 ஆயிரம் பயனாளிகளுக்கும் திட்டவட்டமாக நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் திரும்ப தரப்படும். இதுபோக, தகுதியுள்ள நபர்கள் யாராவது விடுபட்டுப் போயிருந்தால், அவர்கள் துறையின் அதிகாரிகளிடத்தில் விண்ணப்பித்தால் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசு தயாராக உள்ளது. இதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். ஒரே நபர் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால், அதை தள்ளுபடி செய்ய முடியாது. போலி நகைக்குத் தள்ளுபடி கிடையாது. நகையே இல்லாமல், வெறும் பையை வங்கியில் வைத்து மோசடியில் ஈடுபட்டவர்களுக்குத் தள்ளுபடி செய்ய முடியாது.
அதனால்தான் முதல்வரின் அறிவுறுத்தலின்படி, இதுதொடர்பாக செக் செய்தோம், பின்பு கிராஸ் செக் செய்தோம், தற்போது தணிக்கை செய்யப்பட்டு, சிறப்பு அறிக்கையின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
**-வினிதா**
பத்து நாளில் நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் உறுதி!
+1
+1
+1
+1
+1
+1
+1