மம்தா கூட்டத்தில் கலந்துகொள்ள சம்மதித்த காங்கிரஸ்

politics

ுடியரசுத் தலைவர் தேர்தலை ஒட்டி நாளை (ஜூன் 15) டெல்லியில் மேற்கு வங்க முதல்வரும் திருணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தெரிகிறது.
ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஒரே அணியில் திரட்டி குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தினால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை   திணறவைக்க முடியும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.  அதன்படியே பாஜக எதிர்ப்பில் தீவிரமாக இருக்கும் மம்தா பானர்ஜி வரும் ஜூன் 15 ஆம் தேதி அதாவது நாளை பாஜக அல்லாத மாநில முதல்வர்கள், மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளின் தலைவர்களை அழைத்து டெல்லியில் ஒரு கூட்டம் நடத்துகிறார்.இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும்,  தனது மாநில அரசியல் எதிரியான இடது சாரி கட்சித் தலைவர்களுக்கும் கூட அழைப்பு விடுத்திருந்தார்.  மம்தாவின் கூட்டத்தில் கலந்துகொண்டால், காங்கிரஸ் மம்தாவின் தலைமையிலான அணியில் சேர்ந்தது போல் ஆகிவிடுமோ என்ற கேள்வி காங்கிரஸாரிடையே ஏற்பட்டது. மேலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் மம்தா பிளவை ஏற்படுத்த முயல்கிறார் என்று இடது சாரிகளும் குற்றம் சாட்டினார்கள்.
சோனியா காந்தி மருத்துவமனையில் இருக்கும் இந்த நிலையில் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வந்து மம்தா தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க முடிவெடுத்திருக்கிறது.    காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.  அதேபோல இடது சாரிகளையும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வைக்க பலத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. “காங்கிரஸ் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றால் அதன் மூலம் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லை என்ற செய்தி பொது மக்களுக்கு வேகமாக சென்று சேர்ந்துவிடும். அது பாஜகவுக்கு தார்மீக ரீதியாக பலம் சேர்க்கும். எனவே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு எந்த வகையிலும் காரணமாக ஆகிவிடக் கூடாது என்பதால் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கலந்துகொள்ளும்”  என்கிறார்கள் டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில்.
-**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *