தஞ்சையில் தேர்த் திருவிழாவின் போது மின் விபத்து ஏற்பட்ட இடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 27) ஆய்வு செய்தார்.
தஞ்சை களிமேடு பகுதியில் ஆண்டுதோறும் அப்பர் பிறந்த சதய நட்சத்திரத்தின் போது தேர்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று இரவு தொடங்கி நடைபெற்றது.
தேரோட்டம் நிறைவடையும் தறுவாயில், அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராதவிதமாக உயர் அழுத்த மின் கம்பியில் தேர் உரசியதில் விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குச் சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்விபத்து குறித்து சட்டப்பேரவையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், “ களிமேடு கிராமத்தில் பாதுகாப்பான உயரத்தில் 33 கிலோ வாட் மின் கம்பி அமைக்கப்பட்டிருந்தாலும் சப்பரத்திலிருந்த ஜெனரேட்டர் இயங்கிக்கொண்டிருந்தது. இதன்மூலம் மின் அலங்கார விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
ஜெனரேட்டர் எடையின் காரணமாக எதிர்பாராதவிதமாக ஒரு பக்கம் தேர் இழுத்துச் செல்லப்பட்டு சாலையின் ஓரத்தில் செல்லும் 33 கிலோவாட் உயர்மின் அழுத்தக் கம்பியுடன், தேரின் உச்சி பகுதி உரசியது. அப்போது 190 மில்லி செகண்டுகள் அதாவது 0.19 வினாடிக்குள் ரிலே இண்டிகேஷன் மூலம் உயர் அழுத்த மின்சாரம் தானாகவே நின்று விட்டது.
அந்த தேரானது இரும்பு சட்டங்கள் மற்றும் சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது இரும்பு கம்பி உரசியதுமே தேரின் மேற்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
தேரின் பின்புறம் உள்ள ஜெனரேட்டர் அணையாமல் ஓடிக்கொண்டே இருந்ததால் 33 கிலோ வாட் மின்சாரம் தானாக நின்ற போதிலும் ஜெனரேட்டர் மூலம் மின் விளக்குகளுக்கு மின்சாரம் சென்றுகொண்டிருந்தது. இதன் மூலம் மின் விபத்து ஏற்பட்டிருக்கலாம்.
அங்கிருந்த பொதுமக்கள் குறிப்பாகத் தேரில் ஏற்பட்ட தீயை அணைக்கவும் ஜெனரேட்டரை நிறுத்தவும் தண்ணீர் ஊற்றியுள்ளனர்.
அதோடு தேரின் மேல் பகுதியானது மடக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த மடக்கும் அமைப்பானது தேர் திரும்பும் இடத்தில் மடக்கப்படவில்லை. தேரின் உச்சிப் பகுதியை மடக்கி இருந்தால் இந்த மின் விபத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டிருக்கும்.
இந்த விபத்து தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தவும் இதுபோன்ற துயர் நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் நடக்காமல் இருக்கவும் அதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அளித்திடவும் வருவாய் துறை முதன்மைச் செயலாளர் ஜெயந்த் குமார் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
அதுபோன்று முதல்வர் ஸ்டாலின் விபத்து நடந்த இடத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து காயம் அடைந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களிடம் நிவாரண தொகைக்கான காசோலையையும் வழங்கினார்.
உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நடந்தே சென்ற முதல்வர் ஸ்டாலின், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிவாரண தொகையான ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் அவர் மகன் ராகவனும் உயிரிழந்தனர். இவர்களது வீட்டிற்கு முதல்வர் சென்ற போது, ‘நாங்கள் நிர்கதியாகிவிட்டோம்’ என்று அந்த குடும்பத்தினர் கதறினர். அவர்களிடம் நாங்கள் இருக்கிறோம், பார்த்துக் கொள்கிறோம் சென்று முதல்வர் ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், களிமேடு விபத்து தொடர்பாகக் கேள்விப்பட்டுத் துடி துடித்து போனேன். உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.
இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கக்கூடிய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், தஞ்சை மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான துரை சந்திரசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட உத்தரவிட்டேன்.
இதைத்தொடர்ந்து சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு சென்னையிலிருந்து மதுரை வந்து, மதுரையில் இருந்து தஞ்சை வந்தேன். பின்னர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துத் தனிப்பட்ட முறையில், அரசின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்தேன்.
இந்த துயரத்தில் நானும் பங்கு எடுத்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசின் சார்பாக மட்டுமல்ல திமுகவின் சார்பாக இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளேன்.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்பதுதான் எனது எண்ணம். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டும் என்று சிலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
போற்றுவார் தூற்றுவாரைப் பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டதில்லை. மக்களுக்குத் துயரம் ஏற்படாமல் காக்கவும் அதையும் மீறி இதுபோன்ற விபத்துகள் நிகழும் போது அந்த துயரத்தில் பங்கு பங்குகொண்டு மக்களோடு இருக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய இலக்கு.
வருவாய்த் துறை முதன்மைச் செயலர் ஜெயந்த் குமார் தலைமையில் இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
**விபத்தில் காயமடைந்தவர்கள்**
எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம் (10), எம். நிதீஷ் ராம் (13), ஏ. மாதவன் (22), டி. மோகன் (54), என். விஜய் (23), எம். அரசு (19), ஜி. விக்கி (21), திருஞானம் (36), வி. ஹரிஷ் (11), சுகுந்தா (33), பி. கௌசிக் (13)
**விபத்தில் உயிரிழந்தவர்கள்**
எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ், எஸ். பரணி (13) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களது உடல் உடற்கூராய்வுக்கு பின்னர் குடும்பத்தினரிடம் இறுதி அஞ்சலிக்காக ஒப்படைக்கப்பட்டது.
**-பிரியா**